districts

img

திரையிசைக் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு

மதுரை, ஜூன் 11-  மதுரை சோழவந்தானில் திரையிசைக் கலைஞர் டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கண்காட்சி மற்றும் உருவச்சிலை திறக்கப்படுகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை பகுதியில் வெங்கலக்குரல் மன்னன் என்று புகழப்படும் திரையிசைக் கலைஞர்  டி.ஆர்.மகாலிங்கம் 1924 ஜூன் 16ஆம் தேதி பிறந்து, 1978ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். 5 வயதிலே நாடக மேடையில் ஏறி பாடத்தொடங்கியவர். இயல், இசை, நாடகம் துறையில் கலைமாமணி விருது பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி, நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கியவர்.

1940 - 1950 ஆம் ஆண்டுகளில் திரைப்படங்களில் இவர் நடித்துப் பாடிய காதல் பாடல்கள் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயரும் புகழும் சேர்த்தன.  

ஸ்ரீவள்ளி திரைப்படம் இவருடைய முதல் படமாகும். தொடர்ந்து இருவர், திருவிளையாடல் உள்பட 39 படங்களில் நடித்துள்ளார்.

 டி.ஆர்.மகாலிங்கத்தின் மேடை நாடக பாடலைக் கேட்டு மெய்சிலிர்த்த ஏ.வி. மெய்யப்பச் செட்டியார், 13 ஆவது வயதில் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். 

முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன் நன்கு இணக்கமாக இருந்தவர். 1962-க்குப் பின் தான் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார். 

வருகிற ஜூன் 16 ஆம் தேதி அவரது நூறாவது பிறந்த நாள். அவரது நூற்றாண்டை கொண்டாடும் விதமாக அவர் திரைத்துறையில் பங்காற்றிய, சாதனை புரிந்த ,விருதுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை சேகரித்து அவர் வாழ்ந்து மறைந்த சோழவந்தான், தென்கரையில்  உள்ள வீட்டில் கண்காட்சியாக வைக்க அவரது பேரன் ராஜேஷ் மகாலிங்கம் ஏற்பாடு செய்துள்ளார்.

ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த விழாவிற்கு  திரைக்கலைஞர்கள் பலர் வருகின்றனர்.  அவரது உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்று கண்காட்சிக்கு வைக்கப்படும் என்று அவரது பேரன் தெரிவித்துள்ளார்.