districts

‘கூத்தாநல்லூர் மகளிர் அரசினர் கலைக் கல்லூரி உடனே இடமாற்றம் செய்யப்பட வேண்டும்’

மன்னார்குடி, அக்.17 - இந்த கல்வி ஆண்டில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன.  இந்த 20 கல்லூரிகளில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரில் இயங்கும் கலைஞர் மு.கருணாநிதி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டும்தான் மகளிருக்கான ஒரே கல்லூரி. மன்னார்குடியில் இருந்து இக்கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தவர்களில், 2  மாணவிகளின் பெற்றோர்களை விசாரித்த போது, “இக்கல்லூரி  துவக்கப்பட்ட அதே துவக்கப் பள்ளியின் வலதுபுற பகுதியில்தான் இப்போதும் இயங்குகிறது. குறைந்தபட்ச கல்லூரி கல்வியியல் சூழல், இடவசதி இல்லாமல் இருந்ததால் தங்கள் பெண் குழந்தைகளை மன்னார்குடிக்கு அருகாமையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்துவிட்டதாக தகவல் வந்தது.  மூன்று மாதங்களுக்கு பிறகு கூத்தாநல்லூரில் இக்கல்லூரியை காணச் சென்றிருந்த போது இக்கல்லூரி செயல்படும் சூழல் நமக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. கூத்தாநல்லூர்  ஜாமியாத் உதவி பெறும் துவக்கப் பள்ளிக்  கட்டிடத்தின் வலப்புற பகுதியில் உள்ள ஒரு கூடத்தில், இரண்டு அறைகளில் மட்டும் இந்த கல்லூரி இயங்கி வருகிறது.  

கல்லூரி முதல்வர், கல்லூரி அலுவலகம் மற்றும் ஆசிரியர்கள் ஒரே ஒரு அறையிலும், ஒரு கூடத்தில் நான்கு வகுப்புகளும், மற்றொரு அறையில் வணிகவியல் வகுப்பும் இருந்தது. தமிழ்,  ஆங்கில இலக்கியம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் பாட வகுப்புகளில் 95  மாணவியர் நடப்பு கல்வி ஆண்டில் பயின்று வருகின்றனர்.  ஒரே கட்டிடத்தில் அடுத்தடுத்து அருகில் துவக்கப் பள்ளி குழந்தைகளின் இரைச்சலுக்கு  மத்தியில், கல்லூரி ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கட்டிடத்தின் முகப்பில் கல்லூரியின் பெயர் பலகை பளிச் சென்று தெளிவாகவே தெரிகிறது. ஆனால் உள்ளே துவக்கப் பள்ளிக் குழந்தைகளின் மழலை இரைச்சல் கல்லூரி இயங்குவதையே மறைத்து விட்டது.  கல்லூரியில் குடிதண்ணீர் வசதியில்லை. வெளியில் இருந்துதான் கொண்டு வரவேண்டும். மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில துறைத் தலைவராக இருந்த பேராசிரியர்  மாறன், மாற்றுப் பணியாக இக்கல்லூரியின் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்கல்லூரியின் ஆங்கில துறைத் தலைவர், பொறுப்பு முதல்வர் எல்லாமே அவர் ஒருவரே.  கல்லூரியை நிரந்தரக் கட்டிடம் வரும் வரை வேறு ஒரு தனி கட்டிடத்திற்கு இந்த கல்வியாண்டிற்குள் மாற்ற வேண்டும்.

புதிய நிரந்தர  கட்டிடத்திற்கான இடத்தைத் தேர்வு செய்து, கட்டிடம் கட்டப்பட்டு கல்லூரி மாற்றப்படுவதற்கு விரைவாக நடவடிக்கைகள் எடுத்தாலும், ஓராண்டிற்கு மேலாகிவிடும்.  எதிர்வரும் கல்வியாண்டிலும் இதே கட்டிடத்தில் கல்லூரி இயங்குவதற்கு அனுமதித்தால் இக்கல்லூரிக்காக விண்ணப்பிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இருக்காது என்பதுடன், நடப்பு கல்வியாண்டில் விண்ணப்பித்த மாணவியரின் எண்ணிக்கைகூட குறைந்துவிடக்கூடும். இதுபற்றி சென்னை கல்லூரிக்  கல்வி இயக்குனர்  பேராசிரியர் முனைவர் ஈஸ்வரமூர்த்தியிடம் நாம் தொடர்பு கொண்டு பேசியபோது  நமது கவலையை அவர் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டார்.  கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம்  வருவதற்கு முன்பாக   வேறொரு கட்டிடத்திற்கு கல்லூரியை மாற்றுவதற்கு  நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.  தஞ்சை  மண்டல இணை இயக்குனரும் இதுபற்றி  தெரிவிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.   இதை  கல்லூரி கல்வித்துறையின் ஏக பொறுப்பாக மட்டும் நாம் கருதவில்லை.   ஏழை எளிய பெண் குழந்தைகளின் உயர் கல்வி எல்லாவற்றையும் விட மேலானது முதன்மையானது என்பதால்  கூத்தாநல்லூர் நகர நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும்  இதன் அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு உடனே  கவனம் செலுத்த வேண்டும். இதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். (ந.நி)

;