districts

தீண்டாமை சுவரை அகற்றாவிடில் அக்.6 போராட்ட தேதி அறிவிக்கப்படும்: தீஒமு

திருவள்ளூர், செப் 21- கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கமூரில் எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை உடனே அகற்ற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் இ.எழிலரசன் தலைமையில் செவ்வாயன்று (செப் 20) கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன்,மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சூரியபிரகாஷ், மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி, சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.மதன், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
தீண்டாமை சுவரை அகற்ற
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்  பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட தோக்க மூரில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடி யிருப்புகளை சுற்றி 10 அடி உயரத்திற்கு, 500 மீட்டர் நீளத்திற்கு பிரமாண்டமான தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளது. இதனை அகற்ற வேண்டும். அங்குள்ள 91 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக நான்கு முறை சமாதான பேச்சுவார்த்தையின் போது தீண்டாமை சுவரை அகற்றுகிறோம் என பொன்னேரி கோட்டாட்சியர் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். சுவரை மாவட்ட நிர்வாகம் அகற்றவில்லை என்றால், அக்டோபர் 6 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தீண்டாமை சுவரை அகற்றுவதற்கான தேதி அறிவிக்கப்படும் என தலைவர்கள் தெரிவித்தனர்.
இருளர் இன மக்களுக்கு பட்டா
சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் சக்கிலி நத்தம் புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என  ஆர்ப்பாட்டம், காத்திருக்கும் போராட்டம் நடத்திய பிறகு சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி கோட்டாட்சியர்  இருளர் இனத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

;