பொங்கல் திருநாளையொட்டி, தஞ்சாவூர் காமராஜர் சந்தை, கீழவாசல் சந்தை, திலகர் திடல் சந்தை, உழவர் சந்தை ஆகியவற்றில் வழக்கத்தைவிட திங்கள்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைத்தார்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதேபோல, வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. மேலும், கரந்தை, சிவகங்கை பூங்கா, மருத்துவக்கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, விளார் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்துகள் குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. பூக்கள் விலை அதிகரிப்பு இதேபோல, தஞ்சாவூர் பூச்சந்தையில் கிலோ மல்லிகைப்பூ ரூ. 2,500-க்கும், முல்லைப்பூ ரூ. 1,400-க்கும், ஜாதிப்பூ, கனகாம்பரம் தலா ரூ.1,500-க்கும், அரளிப் பூ ரூ.600-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும் விற்பனையானது.