மயிலாடுதுறை, மார்ச் 8- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் உலக மகளிர் தின விழாவையொட்டி, மகளிர் திட்டம் சார்பில், சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக மகளிர் தின விழாவையொட்டி, மகளிர் திட்டம் சார்பில் 1018 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.72 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் ஆகியோர் வழங்கினர். உலக மகளிர் தின விழாவினையொட்டி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு உட்பட இதர நலத்திட்ட உதவிகளையும் சேர்த்து 13,753 உறுப்பினர்களை கொண்ட 1,018 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதனை, பயனாளிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ஆ.சீனிவாசன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, வைத்தீஷ்வரன்கோவில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி, மணல்மேடு பேரூராட்சித் தலைவர் கண்மணி, உதவி திட்ட அலுவலர் செல்வகணபதி, வாழந்து காட்டுவோம் மாவட்டச் செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.