districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

பெரம்பலூர், ஜன.21 - தமிழ்நாடு ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் நலச் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட அமைப்பு குழு கூட்டம், மாவட்டத் தலைவர் மணி மேகலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத் தலைவராக மணிமேகலை, செய லாளராக அல்லி, பொருளாளராக மணிமேகலா தேவி,  துணைத் தலைவராக வள்ளியம்மை, துணைச் செயலாள ராக சி.சிவக்கலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தமிழரசி, மல்லிகா, சுமதி மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.9000,  உதவியாளருக்கு ரூ.5000 என ஓய்வூதியத்தை உயர்த்தி  வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு

பாபநாசம், ஜன.21 -  பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி மன்றத் தலைவராக 5 ஆண்டுகள் மக்கள்  பணியாற்றிய, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை மேள தாளங்கள் முழங்க, ஊர்வலமாக அழைத்துச் சென்று, ஊராட்சி மக்கள் பாராட்டு விழா நடத்தினர்.  ஜன.5 அன்றுடன் உள்ளாட்சி அமைப்பின் பதவிக்  காலம் நிறைவடைந்தது. பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில்  34 ஊராட்சிகள் உள்ள நிலையில், அய்யம்பேட்டை அருகில் உள்ள கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கோவிந்த நாட்டுசேரி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலை வர் ஜெய்சங்கர், தனது பதவிக் காலமான 5 ஆண்டுகளில்  மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, கிராம மக்கள் பாராட்டு  விழா நடத்தினர்.  அவர் தனது பணிக் காலத்தில் மக்களின் அடிப்படை  வசதியான குடிநீர், சாலை, கழிப்பிடம், பள்ளிக் கட்டிடம்,  சிறு பாலம் உட்பட 40-க்கும் மேற்பட்ட திட்டங்களை கிரா மத்திற்கு கொண்டு வந்ததற்காக, பொன்னாடை போர்த்தி  பாராட்டினர்.

‘டிராவல்ஸ்’ நிறுவன மோசடி வழக்கு உரிமையாளரின் மைத்துனர் விமான நிலையத்தில் கைது

தஞ்சாவூர், ஜன.21 - தஞ்சாவூர், ரஹ்மான் நகரைச் சேர்ந்த கமாலுதீன் என்பவரின் ‘ராஹத் டிராவல்ஸ்’ பேருந்துகள் மீது முதலீடு செய்தால் மாதந்தோறும் ஈவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதில், ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு, கமாலுதீன் இறந்து விட்டார்.  கமாலுதீன் இறப்புக்கு பிறகு அவரது குடும்பத்தினர், முதலீடு செய்தவர்களுக்கு ஈவுத்தொகை மற்றும் முதலீடு தொகை  வழங்கவில்லை. இதனால், முதலீட்டாளர்கள்  தஞ்சாவூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவ‌ல்து றை‌யில் புகார் அளித்தனர். அந்த புகார்,  திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரி வுக்கு மாற்றப்பட்டது. அந்த டிராவல்ஸ் நிறு வனம் சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி  செய்ததாக, சுமார் 6,000 பேர் புகார் அளித்துள்ளனர்.  இது தொடர்பாக, 2021 ஆம் ஆண்டு  வழக்கு பதிவு செய்யப்பட்டு, கமாலுதீன் மனைவி ரெஹானா பேகம், சகோதரர் அப்துல்  கனி, நிறுவனத்தின் மேனேஜர் நாராயண சுவாமி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப் பட்டனர். இவ்வழக்கு குறித்து மதுரை சிறப்பு  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை பகுதியை சேர்ந்த கமாலுதீன் மைத்துனரான அப்துல்ரசீது மகன் சுஹைல்  அகமது (36), வெளிநாட்டில் தலைமறை வாக இருந்தார். இந்நிலையில், சுஹைல் அகமது காத்தார் நாட்டில் இருந்து ஊருக்கு  வருவதாக, திருச்சி பொருளாதார குற்றப்பிரி வினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை திருச்சி விமான நிலையத்தில், திருச்சி பொரு ளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்கா ணிப்பாளர் லில்லிகிரேஸ் தலைமையிலான காவல்துறையினர், கத்தார் நாட்டில் இருந்து  வந்த சுஹைல் அகமதை கைது செய்து  திங்கள்கிழமை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில்  நேர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் டிராவல்ஸ் உரி மையாளர் மற்றும் அவரது குடும்பத்தின ருக்கு சொந்தமான சொத்துகள் மீது நட வடிக்கை எடுக்கவும், முதலீட்டாளர்களை விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்து வருவதாக குற்றப் புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறன் முன்னாள் படைவீரருக்கு  சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டம்

தஞ்சாவூர், ஜன.21 -  மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களின் அன்றாட தேவைகளை அவர்களே பூர்த்தி செய்திட, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர், சிறப்பு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கிடும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டை சார்ந்த ஒரு கால் மற்றும் இரு கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள தகுதியான மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் (அல்லது) அவர்களை சார்ந்தோர்கள் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர், சிறப்பு சக்கர நாற்காலிகளை இலவசமாக வேறு துறைகளிலிருந்து பெறாத நிலையில், அந்த உபகரணங்கள் பெற்றிட தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04362-230104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

வணிகர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம் இயற்றுக! ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள்

கரூர், ஜன.21 - ஆன்-லைன் வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே செய்ய சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றார் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா. கரூரில் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் சங்க கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்க கொடியை, அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஏற்றி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மே 5 அன்று அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 42 ஆவது மாநில மாநாடு சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் நடக்கிறது. இதில் 5 லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். கரூரில் இருந்து 5 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் திரும்பி பார்க்கும் அறிவிப்பாக இருக்கிறது. நாடு முழுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களும் சிறு வணிகர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் சாமானிய வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏற்கனவே 1.87 லட்சம் வணிகர்கள் கொரோனாவுக்கு பின் காணாமல் போய் உள்ளார்கள். இதனால் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் இயற்றிட வேண்டும்.  18 சதவீத வாடகை வரியை கைவிடுக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி, நகராட்சி பகுதிகளில் கடைகளை இடித்து புதிதாக கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்ட கடைகளை மீண்டும் அங்கே வாடகைக்கு இருந்த வியாபாரிகளுக்கு விட வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் நேருவை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். அவரும் ஆவணம் செய்வதாக உறுதியளித்துள்ளார். குப்பை வரி தமிழகம் முழுவதும் வேறுபாட்டுடன் காணப்படுகிறது. இதனை முதல்வர் முறைப்படுத்த வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை இன்னும் ஒன்றிய அரசு அகற்றாமல் உள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும். மேலும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்துவதையும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இந்நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகள் முன் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு போராட்டத்தில் ஈடுபடும். இணக்கவரி செலுத்தும் வியாபாரிகளுக்கு 18 சதவீதம் வாடகை வரி விதிப்பதை கைவிட வேண்டும்.  ஒருமுனை வரிவிதிப்பு உலகத்திலேயே 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது இந்தியா மட்டும்தான். பாப்கார்னில் சாதாரண பாப்கார்னுக்கு ஒருவரி, மிளகாய் தூள் போட்டால் ஒரு வரி. எனவே ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும் என்கிறோம். இரவு 11 மணி வரை கடையை நாங்கள் திறந்திருந்தால் போலீசார் கடையை மூடுங்கள் என்கிறார்கள். ஆனால் ஆன்-லைன் வர்த்தகம் 24 மணி நேரமும் இயங்குகிறது. வெளிநாட்டு வர்த்தகத்தை தடை செய்து, ஆன்-லைன் வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமே செய்ய சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். உள்நாட்டு வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி, ஒற்றைச்சாளர முறையில் லைசென்ஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கரூர் மாவட்டத் தலைவர் கே.ராஜூ, செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.