திருவாரூர், ஜன.12 - திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் பெறுவதற்கான தரமான விதைகள் குறித்த விரிவான தகவல்களை தஞ்சை சரக விதை பரிசோதனை அலுவலர் மற்றும் திருவாரூர் விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: காவிரி டெல்டா பாசனப் பகுதிகளான திருவாரூர் மாவட்டத்தில், நெல் அறுவடைக்குப் பின் வயலில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, நிலத் தயாரிப்பு இல்லாமலேயே நெல் தாள்களுக்கிடையே பருத்தி விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தின் மொத்த பருத்தி சாகுபடியில் இது 10 சதவீதமாகும். பருத்தி பயிர் பிப்ரவரி, மார்ச் (தை, மாசி) மாதங்களில் இறவைப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், நன்னிலம், குடவாசல், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் கோட்டூர் வட்டாரங்களில் நெல் தரிசில் கோடை பயிராக செய்யப்படுகிறது. இதற்கு பரிந்துரைக்கப்படும் பருத்தி ரகங்கள் - குறுகிய கால இரகங்கள் (130-135 நாட்கள்) - எம்சியு 7, எம்சியு 12, எல்ஆர்ஏ 5166, எஸ்விபிஆர் 3, டிசிஎச்பி 213, வீரிய ஒட்டு பீட்டி பருத்தி இரகங்கள் - ராசி, ஜாது, மல்லிகா, ஜாக்பாட் சூப்பர் காட், ரோபோ, ஆர் பிரதீக், துளசி, அஜோபா, அங்கூர், காவிரி விதை தர நிர்ணயங்கள் - முளைப்புத்திறன்: குறைந்தது 75%, புறத்தூய்மை: 98%, அனுமதிக்கப்படும் மாசுகள்: 2% (கல், மண், தூசி, உடைந்த விதைகள்), களை விதைகள்: 1 கிலோவிற்கு 10 மட்டும், பிற இனப்பயிர்கள்: 1 கிலோவிற்கு 10 மட்டும். ஏக்கருக்கான விதை தேவை - நாட்டு ரகம்: 3 கிலோ (17,000-18,000 செடிகள்), வீரிய ஒட்டு ரகம்: 1 கிலோ (6,000 செடிகள்), பீட்டி பருத்தி: இரட்டை விதை முறை: 900 கிராம் (4,000-5,000 செடிகள்) - ஒற்றை விதை முறை: 450 கிராம். விதைப்பு முறை - இடைவெளி: 75 X 30 செ.மீ., ஆழம்: 3 செ.மீ, பீட்டி பருத்திக்கான இடைவெளி: 120 X 90 செ.மீ மேலும் விவரங்களுக்கும், விதை பரிசோதனைக்கும், “விதை பரிசோதனை நிலையம், பெரியமில் தெரு, விஜயபுரம், திருவாரூர்” என்ற முகவரியை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். பரிசோதனைக் கட்டணம்: ரூ.80/- (ஒரு மாதிரிக்கு), தேவையான விதை அளவு: ரக பருத்தி: 150 கிராம், பீட்டி வீரிய ஒட்டு இரகம்: 100 கிராம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.