districts

திருச்சி முக்கிய செய்திகள்

இந்தியா கூட்டணி ஆட்சியில்  திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதி புதுக்கோட்டை, மார்ச் 28 - அமையப் போகும் இந்தியா கூட்டணி ஆட்சியில், திமுகவின் தேர்தல் அறிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், “நமக்கு மீண்டும் வாக்க ளிக்கும் உரிமை இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் தேர்த லாக இது இருக்கிறது. ஜூன் 4 அன்று வாக்கு  எண்ணிக்கை முடிவுகள், இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின் முடிவுகளாக இருக்கும். ஒரு மாநிலத்தின் முதல்வர், எப்படி  ஒன்றிய ஆட்சிக்காக தேர்தல் வாக்குறுதி களைத் தருகிறார் எனக் கேட்கிறார்கள். இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இந்தியா  கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுகவின்  தேர்தல் அறிக்கையில்  கொடுத்த வாக்குறுதி கள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்றார்.

குவாரி திட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

கரூர், மார்ச் 28 - புகளூர் வட்டம் குப்பம் கிராமத்தில் அமையவுள்ள மூன்று சாதாரண கல்  மற்றும் கிராவல் குவாரி திட்டத்திற்கான பொது மக்கள் கருத்துக் கேட்பு  கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டம் புகளூர்  வட்டம், குப்பம் கிராமத்தில் 3.4.2024 மற்றும் 5.4. 2024 அன்று மனோஜ் பிர பாகர் சாதாரண கல் மற்றும்  கிராவல் குவாரி, ஸ்ரீ செல்வ  விநாயகா ப்ளூ மெட்டல் சாதாரண கல் மற்றும் கிரா வல் குவாரி மற்றும் சத்யா  சாதாரண கல் மற்றும் கிரா வல் குவாரி ஆகியவற்றுக் கான பொதுமக்கள் கருத்து  கேட்புக் கூட்டங்கள் நடை பெற இருப்பதாக அறி விக்கப்பட்டிருந்தது. மக்களவை பொதுத் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந் ததை தொடர்ந்து, மேற் கண்ட குவாரிகளின் பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் ஒத்தி வைக்கப் படுகிறது என மாவட்ட  தேர்தல் நடத்தும் அலுவல ரும் மாவட்ட ஆட்சியரு மான மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.

இயற்கை விவசாயிகளுடன்  கலந்துரையாடல்

தஞ்சாவூர், மார்ச் 28-  தஞ்சாவூர் அருகே மஹர்நோன்புச் சாவடியில், தஞ்சை ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு  மாணவிகள், ஊரக வேளாண் அனுபவ பணித்  திட்டத்தின் ஒரு பகுதி யாக இயற்கை விவசாயி களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயியான கோ.சித்தர், இயற்கை  விவசாயி மற்றும் அலோ பதி மருத்துவராகவும் பணிபுரிந்து கொண்டிருக் கிறார். இவர் தமிழ்நாட் டின் இயற்கை விவசாயி களுக்கான விருதான நம்மாழ்வார் விருதை 2023-24 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிடம்  பெற் றார். இவர் வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி, இயற்கை முறையில் சாகுபடி செய் யும் முறையையும், அதில் உள்ள நன்மைகள், இயற்கை விவசாய அனுப வங்களை மாணவிகளு டன் பகிர்ந்து கொண்டார்.

ரூ.64,680 பணம் பறிமுதல்

பாபநாசம், மார்ச் 28 - தஞ்சாவூர் - கும்பகோ ணம் மெயின் சாலையில், பாபநாசம் அருகே ரெகு நாதபுரத்தில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது திருவா ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி கிருத் திகா என்பவர் வந்த காரை  மறித்து சோதனையிட்ட னர். அதில், அவரிடம் ரூ.  64,680 பணம் இருந்தது.  ஆனால் அதற்குரிய ஆவ ணம் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.

செல்போன் கோபுரங்களிலிருந்து தொலை வானொலி அலகு திருட்டு:

5 பேர் கைது திருவாரூர், மார்ச் 28 - செல்போன் கோபுரங்களில் சுமார் ரூ.1.5  லட்சம் மதிப்பிலான தொலை வானொலி அலகை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்ட னர். திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல் சரகத்தில் செல்போன் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலை வானொலி  அலகு (Remote Radio Unit -RRU)  தொடர்பாக கடந்த 23.10.2023 அன்று  வழக்கு பதிவு செய்யப்பட்டு கொள்ளையர் கள் கண்டறியப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய கொள் ளையர்களை கண்டறிய, குடவாசல் காவல்  நிலைய உதவி ஆய்வாளர் கோபிநாத் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கடந்த ஒரு  மாதமாக இவ்வழக்கில் தொடர்புடைய வர்கள் குறித்தும், மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திருவாரூர்  மாவட்டத்தின் செல்போன் டவரில் பணிபுரி யும் பணியாளர்களிடமும் விசாரணை மேற் கொண்டனர்.  இந்நிலையில் இதில் தொடர்புடைய கொள்ளையர்கள், திருவாரூர் தாலுகா காவல் சரகம், சேந்தமங்கலம் ஆர்.ஆர்.நக ரில் தங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு விரைந்த தனிப்படையினர், ஆர்.ஆர் நகரில்  உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை வீட்டை சோதனையிட்டனர்.  அப்போது, அந்த வீட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், விற்குடி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமத் குமார் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சல்மான்அன்சாரி, வாசீம்  அன்சாரி, வசித் ஆகிய 5 பேர் தங்கியிருந்த னர்.  காவல்துறையினர் அந்த வீட்டில் மேலும்  ஆய்வு செய்த போது, வழக்கில் களவுபோன பொருளான இரண்டு தொலை வானொலி அலகுகள் கைப்பற்றப்பட்டதுடன், திருட்டிற்கு  பயன்படுத்திய ஒரு கார் உட்பட 5 இரு சக்கர வானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.  மேலும், இவர்கள் திருவாரூர் மாவட்டத் தில் வேறு ஏதேனும் இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை தொகுதியில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல்

தஞ்சாவூர், மார்ச் 28-  தஞ்சாவூர் தொகுதியில் மொத்தம் 31 பேர் 36 வேட்பு மனுக் களை தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மார்ச் 20 முதல் 23  வரை யாருமே வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. மார்ச் 25 அன்று 4 பேரும், 26 அன்று 8  பேரும் என மொத்தம் 12 பேர் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, புதன் கிழமை திமுக, பாஜக வேட்பா ளர்கள், தேமுதிக மாற்று வேட்பா ளர் எஸ். பவளக்கொடி, சுயேச்சை வேட்பாளர்கள் அரு.சீர்.தங்க ராசு, எம்.அப்துல் ஹமீது, எஸ். ராஜேந்திரன், என்.செந்தில் குமார், வி.குணசேகரன், எஸ்.ராஜா,  எஸ்.எழிலரசன் உள்பட மொத்தம்  19 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் மொத்தம் 31  பேர், 36 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 30  அன்று இறுதிப் பட்டியல் வெளியிடப் படவுள்ளது.

நூறு சதவீதம் வாக்களிப்போம்! மனிதச் சங்கிலி விழிப்புணர்வு

நூறு சதவீதம் வாக்களிப்போம்! மனிதச் சங்கிலி விழிப்புணர்வு கும்பகோணம், மார்ச் 28- 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று  நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்கள் மத்தியில் 100 சதவீதம் வாக்களிக்கும் உரி மையை செயல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி நாச்சியார்கோவில் கடைவீதியில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோ வில், முருக்கங்குடி சரக வருவாய்த் துறையி னர், காவல்துறையினர், அங்கன்வாடி ஊழி யர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  மேலும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மாவட்ட துணை தேர்தல் நடத்தும்  அலுவலரும், மாவட்ட வட்ட வழங்கல் அலுவல ருமான கமலக்கண்ணன், திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ், நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் திருவிடை மருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம  நிர்வாக அதிகாரிகள், உள்ளாட்சித் துறை பணி யாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாவட்ட துணைத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் வெற்றிலை, பாக்கு, பழங்கள் உள்ளிட்ட தட்டு களுடன், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிர சுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வெளிநாட்டு வேலைக்குச் சென்ற  மகனை கொடுமைப்படுத்துவதாக தாயார் புகார்

வெளிநாட்டு வேலைக்குச் சென்ற  மகனை கொடுமைப்படுத்துவதாக தாயார் புகார் புதுக்கோட்டை, மார்ச் 28-   வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற தனது மகனை வேலை கொடுத்துள்ள நிறுவனத்தினர் கொடுமைப்படுத்துவதாகவும், அவரை மீட்டுத் தர  வேண்டும் என்றும் அவரது தாயார் புகார் அளித் துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அண்டனூர் மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி செ.போதும்பொண்ணு. இவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவல கங்களில் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது: எங்களின் இரண்டாவது மகன் தமிழ் அழகன்  (22), குடும்ப வறுமை காரணமாக கடந்த 2023- இல் வேலைக்காக தாய்லாந்து சென்றார். அங்கி ருந்து மியான்மர் நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு வேலை கொடுத்துள்ள டிஏ என்ற நிறு வனத்தினர், நாளொன்றுக்கு 20 மணி நேரம் வேலை  வாங்குகின்றனர். சரியாக உணவு தராமல் அடித்து  துன்புறுத்துகின்றனர். ரூ. 4 லட்சம் கொடுத்தால்தான் எனது மகனை  ஊருக்கு திரும்ப அனுப்புவதாகக் கூறுகின்றனர். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். எனவே, அவரை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 14 மனுக்கள் ஏற்பு

அரியலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் அரியலூர், மார்ச் 28- சிதம்பரம் மக்களவைத் தேர்த லையொட்டி, வேட்பாளர்கள் தாக்கல்  செய்த மனுக்கள் பரிசீலனையில் 14  மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. சிதம்பரம் தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை புதன்கிழமை வரை  தாக்கல் செய்தனர். இதில் 22 வேட்பா ளர்கள், 27 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் மீதான பரிசீ லனை அரியலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில், தேர்தல் நடத்தும்  அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா  தலைமையில் வியாழக்கிழமை நடை பெற்றது. அதில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சி களின், வேட்பாளர்களின் மனுக்கள்  அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திமுக கூட்டணி வேட்பாளர் விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன், அதிமுக வேட்பா ளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர்  கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் ஜான்சி ராணி, பகுஜன்  சமாஜ் கட்சி வேட்பாளர் க.நீலமேகம் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு அளித்த முன்னாள்  அதிமுக எம்.பி.சந்திரகாசியின்  மனுவில் ஆவணங்கள் முழுமை யாக சமர்ப்பிக்கப்படவில்லை என்ப தால் நிராகரிக்கப்பட்டது.  சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேரின் வேட்பு மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது என சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். தற்போது சிதம்பரம் மக்கள வைத் தொகுதியில், அங்கீகரிக்கப் பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிர தான கட்சி வேட்பாளர்களாக 5 பேர், சுயேச்சை வேட்பாளர்கள் 9  பேர் என 14 பேரின் வேட்பு மனுக்கள்  ஏற்றுக் கொள்ளப்பட்டன. மார்ச் 30 அன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மேல் வேட்பாளர்களின் இறுதி பட்டியல், வேட்பாளர்களுக்கான சின்னங்கள் வெளியிடப்படும்.

அரசுக் கல்லூரி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி 

தஞ்சாவூர்/மயிலாடுதுறை, மார்ச் 28-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.திருமலைச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவ லர் தெய்வானை பேரணியை துவக்கி வைத்து, வாக்க ளிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்களிப்ப தன் இலக்கு குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.  தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி சேதுசாலை, அரசு மருத்துவமனை சாலை, தேவதாஸ் சாலை வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.  இதில், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலசுப்பிர மணியம், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை, நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் முனைவர் ராணி, பேராசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  பொறையார் மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ஸ்ரீகிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழனன்று தரங்கம்பாடி தேர்தல் தனி வட்டாட் சியர் தலைமையில் நடைபெற்றது.  கல்லூரி தாளாளர் முனைவர் சுரேஷ், முதல்வர் மனோன்மணி பார்வதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வாக்களிப் பதன் அவசியம் குறித்தும், வாக்குரிமை குறித்தும் உரை யாற்றி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருகா னந்தம், தேர்தல் தனி வட்டாட்சியர் பாபு ஆகியோர்  வாக்குரிமை குறித்த கையேடுகளை புதிய வாக்காளர்களி டம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள், தேர்தல் ஆணைய ஊழி யர்கள் பங்கேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை  திரும்பப் பெறலாம்: ஆட்சியர்

புதுக்கோட்டை, மார்ச் 28 - உரிய ஆவணங்களைக் காட்டி பறிமுதல் செய்யப்பட்ட  பணத்தை திரும்பப் பெறலாம் என புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஐ.சா.மெர்சி  ரம்யா தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால்  தேர்தல் விதிமுறைகளை மீறி ரூ.50,000-க்கு மேல் உரிய  ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்  மற்றும் இதர பொருட்கள், தேர்தல் பறக்கும் படையினர்  மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்படுகிறது.  அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு மீறிய வகையில் இல்லாமல், தனது சொந்த தேவைக்காக கொண்டு செல்லப்பட்ட பணம்  என்பதற்கு உரிய ஆவணங்களை காட்டி திரும்பப் பெறலாம்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக, புதிய வளாகத்தில், இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் உள்ள மாவட்ட குறைதீர்க்கும் குழுவில், தினந்தோறும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை, பொருட்களுக்கான தங்கள் வசம்  உள்ள ஆவணங்களை மாவட்டக் குழுவின் முன்னிலை யில் சமர்ப்பிக்க வேண்டும்.  மேற்படி ஆவணங்கள், முறையாக இருக்கும் பட்சத் தில் மாவட்ட குறைதீர்க்கும் குழுவினரால்  உரிய விசா ரணை மேற்கொள்ளப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களுக்கான விடுவிப்பாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) தொலை பேசி எண்.8807823314-க்கு தொடர்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. 

அத்தானி பகுதியில்  இளைஞர் மர்ம மரணம் இறப்பில் சந்தேகம்: உறவினர்கள் போராட்டம்

அறந்தாங்கி, மார்ச் 28 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடி குளத்தில் அத்தானி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.  அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும் உறவினர்களுக்கும் தகவல் அளித்த னர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி  காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக் காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விக்னேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் திருவாப் பாடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி காவல்  துணை கண்காணிப்பாளர் கௌதம் மற்றும் அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், அறந்தாங்கி தாசில்தார் திரு நாவுக்கரசர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த மரணம் குறித்து உறவினர்கள் கூறுகையில், “திரு வாப்பாடி பகுதியைச் சேர்ந்த தமிழ் மற்றும் யோகேஸ்வ ரன் ஆகிய இருவரும் விக்னேஷை கொலை செய்ததாக வும் அவர்களை கைது செய்ய வேண்டுமென காவல் நிலை யத்தில் புகார் அளித்தும், தற்போது வரை கைது செய்யப் படவில்லை. அவர்களை கைது செய்யும் வரை உடலை  வாங்க மாட்டோம்” என்றனர்.  இதுகுறித்து வருவாய் துறையினரும். காவல் துறை யினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சைக்கிளுடன் வந்த தமாகா வேட்பாளர்

தூத்துக்குடி, மார்ச் 28- மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக் குடி வேட்பாளர்  எஸ்.டி.ஆர். விஜயசீலன் புதனன்று தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும்  அலுவலரிடம்  வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  மாற்று வேட்பாளராக அவரது துணைவியார் ரீணா சீலன் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக தேர்தல் விதிமுறைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் 200 மீட்டர் தாண்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சின்னமான சைக்கிள் சின்னத்தை வெளிப்படுத்தும் விதமாக சைக்கிளில் வந்து வேட்பு மனு  தாக்கல் செய்தார்.

தாமதமாக வந்த பிரியாணி: வேட்பாளரிடம் கொந்தளித்த பாமகவினர்

ஒட்டன்சத்திரம், மார்ச் 28-  திண்டுக்கல் மக்களவை தொகுத தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமா அறிமுக கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் புதனன்று நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு மேல் கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக, பாமக தொண்டர்கள் கலைந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 கார்களில் பெட்டி பெட்டியாக பிரியாணி கொண்டு வரப்பட்டது. மதிய நேரம் பசியோடு இருந்த தொண்டர் கள் பிரியாணி பொட்டலங்களை வாங்கி ருசிக்க தொடங்கினர். அப்போது வேட்பாளர் திலகா பாமா காரில் புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த பாஜக, பாமக தொண்டர்கள் சிலர், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பாதிக்கு பேருக்கு மேல் வெளியேறிய பின்னர், உணவு கொண்டு வருகிறீர்கள் என்று வேட்பா ளர் திலகபாமாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த  பாஜக, பாமக மாவட்ட நிர்வாகி கள் தொண்டர்களை அமைதிப்படுத்தி னர். கடுப்பான வேட்பாளர் திலக பாமா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கூட்டத்தில் இருந்த மற்ற தொண்டர்கள் சிக்கன் பிரியாணியை ருசித்தனர்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் தோட்டங்களில் விளைவித்த காய்கனி களை விவசாயிகள் மூட்டை கட்டி சரக்கு வேனில் கொண்டு வருவதை தடுத்து மூட்டைகளை பிரித்து தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்கின்றனர். ஆனால், பாமக வேட்பாளர் திலகபாமாவிற்கு சொந்த ஊரான பட்டி வீரன்பட்டியில் இருந்து 2 காரில் சிக்கன் பிரியாணி பெட்டி பெட்டியாக கொண்டு செல்லப்பட்டதை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை.  மேலும் வேட்பாளர் திலகபாமாவுடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும், பிரியாணி விநியோகம் செய்வதையும் செய்தியாளர்கள் படம் எடுக்க விடாமல் தடுப்பதில் பாமகவினர் கவனமாக இருந்தனர். அதையும் மீறி படம் எடுத்தவர்களின் செல்போன் கேமராவை கை வைத்து மறைத்துக்கொண்டனர். 
 

 

;