புதுக்கோட்டை, நவ.29 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, சாம்பியன்ஸ் கிட் விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெள்ளிக்கிழமை வழங்கினார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் 57 பேருக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்த தொகுப்பு, ஸ்மார்ட் வாட்ச், ஐஸ்பேக், தொப்பி, தண்ணீர் பாட்டில், கப், பேக் போன்றவை உள்ளடக்கியதாகும். மேலும், ஈரோட்டில் 6.11.2024 முதல் 8.11.2024 வரை மாநில அளவில் நடைபெற்ற குடியரசு தினவிழா போட்டிகளில், தடகள விளையாட்டில் SDAT மகளிர் விளையாட்டு விடுதி தடகள மாணவிகள் நிவேதா உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், ஸ்ரீகுருபிரியா 100 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், ஆந்திரப் பிரதேசம் வாராங்கல் தென்மண்டல இளையோருக்கான தடகளப் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் தனுஷ் வெள்ளி பதக்கமும் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது என்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார், தடகள பயிற்றுநர் பவித்ரா, பயிற்றுநர்கள் அன்பழகன், விஜயகுமார், ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.