திருச்சிராப்பள்ளி, ஜூலை 26 - எடமலைப்பட்டி புதூரில் வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு திருச்சி வருவாய்த்துறையின் மூலம் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறையின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வாழ்கின்றவர்களுக்கு அந்த பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். ஆண்டுக்கணக்கில் பரிசீலனையில் உள்ள மனுக்களை விரைந்து பரிசீலித்து வீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோ.அபிஷேகபுரம் பகுதிக்குழு கிளைகள் சார்பில் வியாழனன்று எடமலைப்பட்டி புதூர் கடைவீதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.