கோவை, ஆக.23-
கீழடியை போன்று கேரளாவிலும் தொன்மையான பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என கேரளம் அமைச்சர் அகமது தேவர்கோவில் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த துறைமுகம் மற்றும் அருங்காட்சியாக துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், துறைமுக மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியா உன்னத நிலையை அடைந்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. விழுஞ்சம் துறைமுகம் அமைந்தால் ஏராளமானவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். துறைமுகம் அமைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் அங்கு உள்ளது. சமதளப் படுகைகளுடன் பல கப்பல்கள் சென்று வருவதற்கான அமைப்பு அங்குள்ளது அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்வது போல, கேரளாவிலும் ஒன்றிய, மாநில அரசுடன் இணைந்து அகழ்வாராய்ச்சி செய்வதற்கான திட்டங்கள் உள்ளது. ஒன்றிய அரசு நிலைப்பாட்டை பொறுத்து அது செயல்படுத்தப்படும், என்றார்.