கரூர், பிப்.26- குளித்தலையில் அரசுப் பேருந்தும் - காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார், பேருந்தின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் புதன்கிழமை அதிகாலை திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், கரூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் அடியில் கார் சிக்கிக் கொண்டதால் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் உட்பட 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை காவல்துறையினர், விபத்து நடந்த இடத்தில் பார்த்தபோது கார் பேருந்தின் அடியில் சிக்கி கொண்டதால் காரை மீட்க முடியவில்லை. பின்னர், முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரமாக போராடி, காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், குளித்தலை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், கோவை மாவட்டம், குணியாமுத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் மற்றும் காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம், வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு ஆகியோர் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூர் கோவிலுக்கு, காரில் சென்றபோது, இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.