districts

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

திண்டுக்கல், செப்.24- நத்தம் அருகே மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தொடர்பாக அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  நத்தம் கணவாய்ப்பட்டி வேலூரைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி யில் மாணவர்களைக் கொண்டு கழிப்பறை சுத்தம் செய்ததையடுத்து நீதிமன்ற உத்தர வின் கீழ் பள்ளியின்  தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கணவாய்பட்டி வேலூர் பகுதியில்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.  இந்த துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பி.அழகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இப்பள்ளி மாணவர்களைக் கொண்டு பள்ளி  கழிப்பறையை சுத்தம் செய்ய  நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.  இதற்காக கழிவறையை சுத்தம் செய்த மாணவர்களுக்கு ரூ.10 வழங்கியுள்ளது தெரியவந்தது. மேலும் மாணவர்களை இரும்பு ஸ்கேல் கொண்டு அடித்ததாகவும் புகார் எழுந்தது. இப்பள்ளியில் ஆசிரியர் அல்லாத பெண்ணை பாடம் நடத்த அனுமதித்துள்ளார். 3 மாணவர்களுக்கு பெற்றோர் கேட்டுக்கொள்கிற கடிதம் இல்லாமலே மாறுதல் சான்றிதழ் (டி.சி) வழங்கியுள்ளார்.   வாழ்நாளில் எங்கும் படிக்க முடியாது என மிரட்டியுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையில் கடந்த 19.9.2022 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து இது தொடர்பாக ஆசிரியை அழகுவுக்கும், நத்தம் கல்வி வட்ட அதிகாரிக்கும், சென்னை துவக்கக்கல்வி இயக்குநருக்கும், திண்டுக்கல்  முதன்மைக்கல்வி அலுவலருக்கும் நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன.   (நநி)

;