districts

img

விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டம் வெற்றி குருவிக்கரம்பையில் பயனாளிகளிடம் நகை ஒப்படைப்பு

தஞ்சாவூர், அக்.5 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டம் வெற்றியடைந்த நிலையில்,  குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.32,65,300 கடன் தள்ளுபடி  செய்யப்பட்டு, 39 விவசாயிகளிடம் நகை திருப்பி ஒப்படைக்கப்பட்டது. 
நகைக் கடன் தள்ளுபடி 
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை கிராமம் எண்.1230 தொடக்க வேளாண்மை கிராம கூட்டுறவு சங்கத்தில், கடந்த அரசு தள்ளுபடி செய்த நகைக் கடன் தள்ளுபடியில் மொத்தமுள்ள 109 பேரில் 39 பயனாளிகளுக்கு முறையாக வழங்காமல், தவறான காரணங்களை கூறி உரியவர்களுக்கு நகைகளை வழங்க மறுத்தனர். தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்திலும், உயர் அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும், மாவட்ட அளவில் தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் முறையிட்டும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
சமாதானப் பேச்சுவார்த்தை 
இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, வட்டாட்சியர் த.சுகுமார் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில், கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால், நகையைத் தராமல் கூட்டுறவு கடன் சங்கம் இழுத்தடிப்பு செய்து காலம் கடத்தி வந்தது.  பின்னர் கடந்த செப்.30 அன்று உரிய நடவடிக்கை எடுத்து, நகையைத் திருப்பி வழங்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. அதனையடுத்து உயர் அதிகாரிகள் தலையிட்டு அக்.3 அன்று நகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகளிடம் உறுதி அளித்ததன்படி போராட்டம் நிபந்தனைகளோடு ஒத்தி வைக்கப்பட்டது. நகை ஒப்படைப்பு  ஏற்றுக் கொண்ட அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில், திங்களன்று மாலை பயனாளிகள் 39 பேருக்கும், 172.25 (நூற்று எழுபத்து இரண்டே கால்) பவுன் நகை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.32,65,300 அசலும், ரூ.81,479 வட்டியும் என மொத்தம் ரூ.33,48,729 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

;