districts

img

பயிர்க் காப்பீட்டு இழப்பீடு வழங்குவதில் தஞ்சை மாவட்டத்திற்கு இழைக்கப்படும் அநீதி விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக். 21-  பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக, தஞ்சை மாவட்டத்திற்கு 7 கிராமங்களுக்கு, ரூ.36 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்த, பல்வேறு வட்டாரங்களில் ஒரு கிராமத்திற்குக்கூட இழப்பீடு அறிவிக்கப்படாதது தஞ்சை மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் பயிர்க் காப்பீட்டில், தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். தொடர் கனமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22 விழுக்காடு உயர்த்த வேண்டும். நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்துப் பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கு.சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;