districts

மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு: பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

தஞ்சாவூர், செப்.24 -  தஞ்சாவூரை அடுத்த சூரக்கோட்டையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், மீன் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை துவங்கியது.  வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்கத்தின் இயக்குனர் ஜா.ஸ்டீபன் சம்பத்குமார் வரவேற்றார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் தலைமை வகித்துப் பேசினார். தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் எம்.லோகநாதன் சிறப்புரையாற்றினார். விழாவில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த தொழில்நுட்பக் காணொளி வெளியிடப்பட்டது. கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து நூல் வெளியிடப்பட்டது. மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான சிறப்பு மொபைல் ஆப் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன.  புத்தகத்தினை மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் வெளியிட, தேசிய உணவு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் லோகநாதன் பெற்றுக் கொண்டார். இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மீன் வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் தலைவர் வ.செந்தில்குமார் நன்றி தெரிவித்தார். பின்னர் மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி, பொன்னேரி, முட்டுக்காடு ஆகிய மீன்வள ஆராய்ச்சி மையத்தில், மீன் மற்றும் இறால் வளர்ப்பு குறித்த விளக்கம் தொடர்பாக அங்குள்ள பண்ணைகளில் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏழு வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அங்கு மீன் வளர்ப்பு குறித்த ஆராய்ச்சிகள், கருத்தரங்கங்கள் அவ்வப்போது விவசாயிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் மீன் வளர்ப்பவர்கள், மீன் பண்ணை தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், மீன் குறித்த ஏழு ஆய்வகங்கள், மூன்று நடமாடும் நோய் கண்டறியும் ஆய்வகங்கள், நான்கு மூலக்கூறுகள் கண்டறியும் ஆய்வகங்கள், மீன் உணவுப் பொருள் ஆய்வகங்கள், மீன் தீவன தர பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதனை குறைந்த கட்டணத்தில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மீன் வளர்ப்பில் நோய் கண்டறிவது மிக முக்கியமான ஒன்று. இதற்காக பல்கலைக்கழகம் சார்பில், மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நோய்கள் குறித்த சந்தேகங்களை மீன் வளர்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.  மீன் வளர்ப்பில் அதிக அளவில் தீவனத்திற்காக செலவழிக்கப்படுகிறது. அதை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து முட்டுக்காடு மீன் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதிய ரக தீவனங்களையும் வெளியிட்டுள்ளோம். வரும் 2024 - 25 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தியை 22 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது ஒரு ஹெக்டேரில் சுமார் மூன்று மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே உற்பத்தி உள்ளது. ஆனால் குறைந்தது ஐந்து மெட்ரிக் டன் அளவிற்கு மீன் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்தால் மட்டுமே மத்திய அரசின் இலக்கை அடைய முடியும். நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்வது போல மீன் வளர்ப்பு விவசாயிகளும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. மீன் வளர்ப்பவர்கள் நிச்சயம் அதில் கவனம் செலுத்த வேண்டும். மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு படிப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு என அரசு அறிவித்துள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

;