districts

img

பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

ஒரு ஆண்டில் ஒருமாதம் வருமானம் இல்லை என்றால் ஒரளவு சமாளிக்க முடியும். ஆனால் ஆண்டு முழுவதும் வருமானம் இல்லை என்றால் தொழிலாளர்களின் நிலை என்னவாகும். திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. அதனை சார்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். விவசாய பயிர் சாகுபடி, மலர் சாகுபடி, கரும்பு சாகுபடி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வந்தனர். தற்போது விவசாய பணிகள் நடைபெற்றாலும், விவசாய பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. வெளியூர் வியாபாரிகள் வராததால் குறைந்த லாபத்தில்தான் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.

கடந்த சில மாதங்களில் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ளனர். தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். மலர் பறித்தவர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் வணிக நிறுவனங்களை திறந்து வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை தொடர்ந்து வருவதால் அதனை நடத்தும் உரிமையாளர்களும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் வருமானம் பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கரும்புச்சாறு, பழங்கள், துணிகள் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால் லாபம் ஈட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

கட்டுமான தொழில்களும் மந்தமான நிலையில் நடைபெற்று வருகின்றன . வாகன போக்குவரத்து இல்லாததால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடைகள் மற்றும் சிறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்த ஏராளமான பெண்களும் இந்த காலகட்டத்தில் வேலை இழந்துள்ளனர். கார் ,ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் வருமானம் ஈட்ட முடியாத நிலை தொடர்கிறது கோவில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயில் அருகே வியாபாரம் செய்து வந்தவர்களும் கடுமையாக பாத்க்கப்பட்டுள்ளனர்.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை விமர்சையாக நடத்த முடியாததால் அதன் மூலம் வருமானம் பெற்றுவந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் . தற்போது 30 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் தேவைக்கு வருமானம் ஈட்டி வருகின்றனர். 70 சதவீத மக்கள் பொதுமுடக்க காலத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர். எனவே கொரோனா தொற்று முடிவுக்கு வந்தால்தான் தொழிலாளர்களின் கேள்விக்குறியான வாழ்க்கையில் விடியல் ஏற்படும். அதுவரை அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

;