திருவண்ணாமலை, மே 13- திருவண்ணாமலை, கிரிவலப்பாதை யில் கோடை வெயில் தாக்கத்தால் வன விலங்குகள் தண்ணீர் தேடி சாலைக்கு வருவதை தவிர்க்க வனத்துறையினர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2668 அடி உயரம் கொண்டது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை. 14 கிலோ மீட்டர் தூரம் சுற்றளவு கொண்டுள்ளன. இந்த மலையின் கன்னமடை காப்புகாடு வன பகுதியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மயில், மான், குரங்கு, முயல், காட்டுப்பன்றிகள், முள்ளம் பன்றி கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை காலம் தொடங்கி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் காப்பு காடு பகுதியில் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிரிவலப்பாதையில் உள்ள சாலைக்கு வருகின்றனர். இதனால், விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. தண்ணீர் தேடி வனவிலங்குகள் சாலைக்கு வருவதை தவிர்ப்பதற்கு வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரம்ப வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.