சென்னை, பிப்.12 மணலை தோண்டி முட்டையிட்டுவிட்டு ஆமைகள் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். அதன் பிறகு இந்த முட்டைகளை ஆமையின் கால் தடத்தை வைத்து பின்தொடர்ந்து சென்று வனத்துறையினர் சேகரிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பிறகு ஆமைகள் கடற்கரை பகுதியில் மணலை தோண்டி முட்டையிடுவது வழக்கம். இந்த முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து குஞ்சு பொறிக்க வைத்து பின்னர் கடலில் விடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை கடற்கரை பகுதிகளில் வனத் துறை சார்பில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடையாறு, பெசன்ட் நகர், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வனத்துறை அதிகாரி பிரசாந்த் தலைமையில் மாணவர்கள் அடங்கிய தன்னார்வலர்கள் நள்ளிரவில் இந்த பணியை மேற்கொள்கிறார்கள். ஆமைகளை பொறுத்த வரையில் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் கடற்கரைக்கு வந்து மணலை தோண்டி முட்டையிடும். மணலை தோண்டி முட்டையிட்டுவிட்டு ஆமைகள் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். அதன் பிறகு இந்த முட்டைகளை ஆமையின் கால் தடத்தை வைத்து பின்தொடர்ந்து சென்று வனத்துறையி னர் சேகரிக்கிறார்கள்.
இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு நாள் நள்ளிரவும் ஆமை முட்டைகளை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முறை ஒரே நாளில் 20 முட்டைகள் கிடைத்துள்ளன. ஆனால் அது போன்று தினமும் கிடைப்பது இல்லை. 4 முதல் 6 முட்டைகள் வரை கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும். இப்படி சேகரிக்கப்படும் ஆமை முட்டை களை அதற்கென தனியாக உள்ள கடற்கரை பகுதிகளில் வைத்து வனத்துறை அதிகாரிகள் குஞ்சு பொறிக்க செய்கிறார்கள். சேகரித்து வைக்கப்பட்டு 45 நாட்கள் கழித்து முட்டைகளில் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளியில் வரத் தொடங்குகின்றன. இந்த குஞ்சுகளை வனத் துறையினரே பாதுகாப்பாக எடுத்து சென்று கடலில் விடுவார்கள். இந்த ஆண்டு இதுவரை 2,220 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டும் இதேபோன்று ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வனத்துறை சார்பில் சென்னை கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் 60 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் வரை பொறிக்க வைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.