districts

img

சுடுகாட்டு பாதை கேட்டு சடலத்துடன் போராட்டம்

திருவள்ளூர்,டிச.21- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட  வேலப்பன் நகரில் 50 க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் தனியாருக்கு சொந்த மான விளை நிலங்கள் வழியாக,  ஒரு கிலோ மீட்டர் தூரம் தூக்கிச்சென்று சுடு காட்டில் அடக்கம் செய்து வழக்கமாக உள்ளது. பொன்னேரி வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை,  சுடுகாட்டுப் பாதை அமைத்து தர வேண்டி பலமுறை கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்துள்ளனர். ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படு கிறது, இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற கூலித் தொழிலாளியின் மகன் யுகந்தர் என்ற 14வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று (டிச.20) உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து    புதனன்று       (டிச.21)  இறுதி சடங்கு செய்வதற்காக உடலை விளைநிலங்களில் வழி யாக கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் அந்த நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட  உறவினர்கள் சுடுகாட்டிற்கு மாற்றுப் பாதை அல்லது மாற்று இடத்தில் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கி தரும் வரை சிறுவனின்  உடலை அடக்கம் செய்யப் போவதில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த வருவாய் அதிகாரிகள் மாற்றுப்பாதை அல்லது மாற்று இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து,  விளைநிலங்கள்   வழியாகவே சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.