சென்னை, ஏப்.21 - தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சாரரயில்களில் படியில்நின்றுபயணம் செய்வது, ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதை தடுக்க தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில் கடந்த ஒரு ஆண்டில், தண்டவாளத்தை கடக்க முயன்ற 1,411 பேருக்கும், ரயில் படிகளில் பயணம் செய்த 767 பேருக்கும், அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வோருக்கு 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும், தண்ட வாளத்தில் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.