சென்னை, ஆக.24-
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். டி.எச்.ரோடு பகுதியில் பள்ளியின் பின்பக்க கேட் உள்ளது.
மாணவிகள் பலர் இந்த வாசல் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள பாசுதேவ் தெருவில் பள்ளியில் இருந்து 40 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்லும்போது மது குடித்துவிட்டு வருவோரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியின் கேட் மூடப்பட்டது. இது மதுப்பிரியர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. ஆனால் மாணவிகள் பிரதான கேட் அமைந்துள்ள டி.எச்.சாலையை எம்.சி.எம்.கார்டன் 1-வது தெருவழியாக 400 மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா கிரேஸ் கூறுகையில், டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான் பின்பக்க கேட்டை திறக்க முடியும் என்றார்.