districts

img

நாளை புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு

சென்னை, டிச.29- புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலை யில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2022-ம் ஆண்டு முடிந்து 2023 ஆண்டு பிறப்பதையொட்டி அதனை வரவேற்க மக்கள் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும் நிலையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். புத்தாண்டு பிறக்கும் 31-ந்தேதி நள்ளிரவில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ‘ஹேப்பி நியூ இயர்’ என உற்சாகம் பொங்க கூச்சலிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறாமல் தடுப்பதற்காக போலீசார் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
வாகன சோதனை
புத்தாண்டையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்தே காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் சுமார் 450 இடங்களில் வாகன சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு காவல் நிலை யத்திற்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடலில் குளிக்கத்தடை
தங்களது பகுதியில் பிரச்சினை ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவை யான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு பிறகு சாலைகளில் சுற்றுபவர்களை எச்சரித்து வீடுகளுக்கு செல்லு மாறு அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவிலும், புத்தாண்டு தினத்தன்றும் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் சவுக்கு கட்டைகளை வைத்து தடுப்புகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மது பிரியர்களை பிடிக்க தனிப்படை
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்பட உள்ளது. வேகமாக வாகனம் ஓட்டு பவர்களை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்தும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்கள் இரவு முழுவதும் செயல்பட காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இந்த அனுமதியை காவல்துறையினர் வழங்கி இருக்கிறார்கள்.
மேம்பாலங்கள் மூடப்படும்
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வேகமாக செல்வதை தடுக்க சென்னையில் உள்ள பெரிய மேம்பாலங்களை மூடிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரங்களில் உள்ள 40 மேம்பாலங்களின் நுழைவு பகுதி, இறங்கும் பகுதி ஆகிய வற்றில் தடுப்புகளை அமைக்க உள்ளனர். இதனால் போதையில் பாலங்களின் மீது மக்கள் பய ணம் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தலை மையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் 20 ஆயிரம் போலீசாரும் மாநிலம் முழுவதும் 1 லட்சம் காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.