அம்பத்தூர், பிப்.11- திருவேற்காடு - பருத்திப்பட்டு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் திறப்பு விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் செவ்வாயன்று (பிப். 11) நடைபெற்றது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டு உயர்மட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் வேலு பேசுகையில், திருவேற்காடு பகுதி மக்கள் ஆவடி, பூந்தமல்லி, சென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால், கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி பல ஆண்டுகளாக சென்று வந்தனர். மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி ஆவடி, பூந்தமல்லி மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, 94 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலத்திலும் இருவழி பாதையுடன், இரு பக்கமும் மிதிவண்டி பாதை 2 மீட்டர் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல 1.50 மீட்டர் நடைபாதையுடன் இப்பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த பாலத்தினால் திருவேற்காடு, பருத்திப்பட்டு, வீரராகவபுரம் ஆவடி, பூந்தமல்லி, காடுவெட்டி, கோவர்த்தனகிரி, சென்னீர்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்கள் எளிதாக கூவம் ஆற்றை கடக்க பெரிதும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் தான் மாநில அரசின் நான்கு வழிச்சாலை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்வில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் பெருநகர அழகின் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன், திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.