ராணிப்பேட்டை, அக்.6 – லாலாபேட்டை காஞ்சனகிரி மலையில் மூலிகை தோட்டம் அமைத்து சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் , கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேர்க்கடலை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வேர்க்கடலை அறுவடை இயந்திரம் குறைந்த விலையில் வாடகைக்கு விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அரசிடமிருந்து கலவை பகுதிக்கு ஒரு வேர்க்கடலை அறுவடை இயந்திரத்தை வாங்கி கொடுக்க வேண்டும். ஒழுங்குமுறை கூடத்தில் திறந்த வெளியில் விளைபொருட்கள் விற்பனை செய்வதற்கான கூடாரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமிரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாலாபேட்டை காஞ்சனகிரி மலை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்திட அரசின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பல்வேறு இடங்களில் பிரச்சனைகள் நிலவுகிறது ஆகவே அதனை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொண்டார். முன்னதாக, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அரசு நலத் திட்டங்கள் குறித்த கையேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.