கிருஷ்ணகிரி, டிச.25 – பட்டு வளர்ச்சி,சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்,வன காவலர், உள்ளிட்டோருக்கு குறைந்தபட்சம் ரூ.7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அனைத்து துறை ஓய்வூதியர்கள் வலி யுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க சார்பில் ஓய்வூதியர் தின விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார். செயலாளர் முருகன் துவக்கி வைத்தார். பட்டுவளர்ச்சித்துறை ஓய்வூதியர் மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசலு விழா உரையாற்றினார். துணைத் தலைவர்கள் நாகராஜன் கலைவாணி ராஜாமணி, கொம்பண்ணா, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் உரையாற்றினார். 70 வயது கடந்தவர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம், இலவச பேருந்து, ரயில் பயண பாஸ்,காசு இல்லா மருத்துவ காப்பீடு,புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த,தமிழக,ஒன்றிய அரசுகள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஓய்வூதியர்கள் சார்பில் வலி யுறுத்தப்பட்டது. முன்னதாக, 75 வயதை கடந்த ஓய்வூதியர்கள் 80 பேர் கவுரவிக்கப்பட்டனர். அகர்வால் கண் மருத்துவமனை,ஸ்ரீ அருணாச்சலம் மருத்துவமனைகள் ஓய்வூதியர்களுக்கு இலவச கண், உடல் பரிசோதனைகள் செய்தனர்.