districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

பாபநாசம், பிப்.21-  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சத்திய மங்கலத்தில் அட்மாத் திட்டத்தின் கீழ் பழப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.  பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக் முன்னிலை வகித்தார். இதில், உதவி தோட்டக் கலை அலுவலர் ராஜா, பழ பயிர்களில் நோய்கள், பூச்சிகள் கட்டுப் படுத்தும் முறைகள், கவாத்து முறைகள், உரம் அளவு மற்றும் உரமிடும் கால இடைவெளி முறைகள், பயிர் பாதுகாப்பு மேலாண்மை குறித்து விளக்கிப் பேசினார். வட்டார தொழிற் நுட்ப மேலாளர் வெங்கடேசன், பழ பயிர்களில் பாதுகாப்பு மேலாண்மை, மாநிலத் திட்டங்கள், உயிர் உரங்களின் பயன்கள், மானிய விலையிலான உயிர் உரங்கள் குறித்து, விளக்கிப் பேசினார். இதற்கான ஏற்பாட்டினை உதவி தொழிற் நுட்ப மேலாளர் நித்யா செய்திருந்தார்.

திருவாரூர் ஆட்சியரிடம்  எஸ்எப்ஐ கோரிக்கை மனு

திருவாரூர், பிப்..21-  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் வ. மோகன சந்திரனிடம், இந்திய மாணவர் சங்கத்தின் நன்னிலம் கிளை சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைச் செயலாளர் ஜெ. தயாநிதிமாறன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனுவில், கல்லூரிக்குச் செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது. சாலையை சீர் செய்து புதிய சாலை அமைத்து தர வேண்டும. மாணவர்கள் பாதுகாப்பு கருதி கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி அருகே மாயமானவர்  சடலமாக மீட்பு

தஞ்சாவூர், பிப்.21-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாயமானவர் சடலமாக மீட்கப்பட்டார். பேராவூரணி அருகே உள்ள வலச்சேரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(47), கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஜெகதாம்பாள் மற்றும் ஒரு மகன்,  மகள் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற சேகர், வீடு  திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், திருச்சிற்றம்பலம் கண்ணாகுளம் பகுதியில் உள்ள நெல் வயலில் சேகர் உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது.   இதுகுறித்து, சேகரின் மனைவி ஜெகதாம்பாள் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புறம்போக்கு இடத்தை கோவிலுக்குச் சொந்தமான இடமென கூறி  வணிகரை வெளியேற்ற துடிப்பதா?: அனைத்துக் கட்சியினர் போராட்டம்

மயிலாடுதுறை, பிப்.21-  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்துள்ளதாகக் கூறி, வணிகம் செய்பவரை வெளியேற்ற முயற்சி செய்யும் இந்துசமய அறநிலையத்தறை அதிகாரிகளைக் கண்டித்து, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தலைமையில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குத்தாலம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைவீதியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மன்மதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சர்வே எண் 176/2ல் உள்ள 3875 சதுரஅடி இடத்தில் கண்ணன் என்பவர் வணிகம் செய்து வருகிறார். இவர் அறநிலையத்துறைக்கு மாதந்தோறும் வாடகையாக 680 ரூபாய் செலுத்தி வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை வாடகை நிலுவையின்றி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரவு வைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் சான்று வழங்கியுள்ளனர். அதன் பிறகு தொடர்ந்து ரூ.94,752, ரூ.2800 என வசூலித்தும், கடந்த 2016 ஆண்டு முதல் கோவில் நிலங்களில் குடியிருப்போர் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகை என்ற பெயரில் கண்ணன் ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் வாடகை செலுத்தவில்லை என்று கூறி, ஆக்கிரமிப்பாளராகக் கருதி இடத்தை காலி செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.  இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்ணன் வழக்கு தொடுத்து ரூபாய் 5 லட்சங்கள் வைப்பு தொகையாக நீதிமன்ற உத்தரவின் பெயரில் அறநிலையத்துறைக்கு செலுத்தியுள்ளார். அதன் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து 2025 ஜனவரி மாதம் வரை ரூ.38,964 டி.டி. யாக செலுத்தியுள்ளார்.  இந்நிலையில் கண்ணன் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் வசம் இடத்தை கையகப்படுத்துவதாக நோட்டீஸ் அனுப்பி அறிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த கண்ணன், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விஜய் தலைமையில், அனைத்து கட்சியினர், இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கண்டன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு மற்றும் தனிநபர் இடத்தில் கண்ணன் வணிகம் செய்து வரும் நிலையில், அறநிலையத்துறை எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் பட்டா வைத்துக் கொண்டு கோவிலுக்குச் சொந்தமான இடம் என வாடகை வசூல் செய்து வருவது கண்டனத்துக்குரியது. கோயில் மனைகளில் குடியிருப்போர் வணிகம் மற்றும் விவசாயம் செய்பவர்களிடம் உயர்த்தப்பட்ட வாடகை என்ற பெயரில் இந்து சமய அறநிலையத்துறை பொதுமக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்து அறநிலையத்துறைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.  இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் துரைராஜ், மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையால் அறிவிக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை, தேதி அறிவிக்கப்படாமல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.

வருவாய்த்துறை அலுவலர்  கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.21-  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதன்கிழமை மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் துணைத் தலைவர் டி.எஸ். அசோக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தெ. விஜய் ஆனந்த் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். செங்குட்டுவன், மாவட்ட இணைச்செயலாளர் ப. பரமேஸ்வரி ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்கள். மாநிலப் பொருளாளர் வெ.சோமசுந்தரம் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி கண்டன உரையாற்றினார். இஎஸ்ஆர் முறையை கைவிட வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.