சென்னை, டிச. 12- எண்ணூர் கழிமுக ஈர் நீர் பரவலில் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கொட்டுவது தடுக்கப்பட வேண்டும் என்று வடசென்னை பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் இந்த குழுவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மிக்ஜம் புயலால் தீவிர மழைப்பொழிவு ஏற்பட்டதில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மக்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். வடசென்னை சிறு - குறு உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதியாகும். இங்கு உடல் உழைப்பை மட்டுமே நம்பியுள்ள ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும் மீனவர்கள், சிறு குறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவு மேம்படுத்தாத பகுதியாகும். வட சென்னைக்கு உட்பட்ட பெரம்பூர், திருவொற்றியூர், மணலி, ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், கொளத்தூர், மாதவரம், ராயபுரம், ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஊடகங்களின் கவனம் பெறாததால் வெளி உலகத்திற்கு இந்த பாதிப்பு பெரியளவில் தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட பல பகுதிகளில் 7 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கியிருந்தது. கோரிக்கைகள் குடியிருப்புகளுக்குள் 4 முதல் 5 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, கட்டில், மெத்தை, துணிகள், சமையல் பொருட்கள் என வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளன. இருசக்கரவாகனம், ஆட்டோ, கார் என அனைத்து வாகனங்களும் தண்ணீருக்குள் மூழ்கி சேதமடைந்துள்ளன. பழுது பார்க்கவும், பழுது செய்ய இயலாத வாகனங்களுக்கு காப்பீடு கூட கிடைக்காத நிலை உள்ளது உடல் உழைப்பை மட்டுமே நம்பியுள்ள பெரும் பகுதி மக்கள் 6 நாட்கள் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். மீனவர்களின் போட் மற்றும் வலைகள் சேதமடைந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக கடலுக்குள் செல்ல முடியாததால் வருமானமின்றி தவிக்கின்றனர். கடலில் கச்சா எண்ணெய் கலந்ததால் மீன் வளமும், மீன் பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களுக்குள் புகுந்த நீரால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான சிறு குறு நிறுவனங்களுக்குள், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் புகுந்ததால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. எண்ணூர் மற்றும் மணலி பகுதிகளில் தொழிற்சாலைகளில் இருந்து மழை நீரில் அடித்து வரப்பட்ட ரசாயன எண்ணெய் வீடுகளுக்குள் புகுந்து மொத்த பொருட்களையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாக்கி உள்ளன. மணலி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த ரசாயன எண்ணெய் மொத்த பயிர்களையும், சாகுபடியையும் நாசமாக்கியுள்ளது. வட சென்னையில் மொத்த பாதிப்பு ரூ 3 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும்.
எனவே தாங்கள் இதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின், சிறு குறு நிறுவனங்களின் பொருளாதார இழப்பை ஈடு செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் வட சென்னையின் மிக முக்கிய நீர் வடிகால் அமைப்புகள் ஆக்கிரமிப்புகளால் சீர்குலைந்துள்ளது. எண்ணூர் கழிமுக ஈர் நீர் பரவலில் ஒன்றிய அரசின் தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தமான என்டிபிசி மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஆழம் குறைந்து கடல் நீரில் கலக்க வேண்டிய நீர் வடியாமல் மீண்டும் ஊருக்குள் திரும்பி வெள்ளத்தை உருவாக்குகிறது. எனவே உடனடியாக தூர்வாரி, சாம்பல் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். வட சென்னைப் பகுதியின் கொசஸ்தலை, கேப்டன் காட்டன் கால்வாய், நல்லா கால்வாய், புழல் ஏரி, அம்பத்தூர் ஏரி, ரெட்டை ஏரி ஆகியவற்றை தூர் வாரி, அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் வடசென்னை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க ஒன்றிய - மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தாங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.