சிதம்பரம், அக் 27- சிதம்பரம் அருகே கிள்ளை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் கொடியை கட்சியின் மூத்த உறுப்பினர் ஜீவா ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ஒன்றியக்குழு உறுப்பினர் சுதாகர் வாசித்தார். திருஞானம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் ஆழ்வார் வேலை அறிக்கையும், வரவு செலவு அறிக்கையை சுனில் குமார் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன் மாநாட்டினை வாழ்த்தி பேசினார் மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு பேசினார். கலைமணி நன்றி கூறினார். ஒன்றியக்குழு தேர்வு 11 பேர் கொண்ட பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியக்குழுவுக்கு ஜி.ஆழ்வார் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். வடக்கு பிச்சாவரம் - கிள்ளைக்கு இடையே இணைப்பு பாலம் கட்ட வேண்டும், பல ஆண்டுகளாக கான்சாகிப் வாய்க்கால் கரையோரம் குடியிருக்கும் கொடிப்பள்ளம் கிராம மக்களுக்கு மாற்று இடம் பட்டா வழங்க வேண்டும். கிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர பணி மருத்துவரை நியமிக்க வேண்டும். தெற்குபிச்சாவரம் உப்பனாற்றில் பழுதடைந்துள்ள பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.