districts

img

பன்முகம் கொண்ட தலைவர் தோழர் கே.வரதராசன்

கொரோனா எனும் கொடிய தொற்று நம்மை சூழ்ந்துள்ள இந்த சோதனை மிகுந்த காலத்தில் கட்சியினுடைய மூத்த தலைவரும் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான அன்புத் தோழர் கே.வரதராசன் மறைந்து ஓராண்டு ஓடிவிட்டது என்பதை எண்ணும் போது மனம் விம்முகிறது. இன்று (மே 16) அவரது முதலாமாண்டு நினைவு நாள் ஆகும்.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

கொரோனா காலத்தில் நமது செங்கொடி இயக்கம் சில முக்கியமான மாநில மற்றும் மாவட்ட மூத்த தலைவர்களை இழந்திருக்கி றது. கொரோனா பரவல் முந்தைய அலையை விட தற்போது வீரியமாக பரவி வருவதுடன் உயி ரிழப்புகள் அதிகமாக உள்ளன. மருத்துவமனை களில் ஆக்சிஜன் படுக்கை வசதி, மருந்து தட்டுப்பாடு என இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது கட்சி தோழர்கள் பலநூறு பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ மனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நமது கட்சியின் களப்போராளிகள் இறந்து வருவதைப் பார்க்கும் போது இதயம் பதை பதைக்கிறது. தடுப்பூசி என்ற ஆயுதம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகும் கூட, இந்தியாவில் மோடி அரசின் 15 மாத கால மிக மோசமான அலட்சியத்தின் விளைவாக கொரோனா இரண்டாவது பேரலை மிகப் பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட்டி ருக்கக் கூடிய - மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவேயாகும். இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் ஏராளம், ஏராளம். இத்தகைய கால கட்டத்தில் நம்முடன் தோழர் கே.வரதராசன் அவர்கள் இல்லையே என்ற எண்ணம் மேலோங்குகிறது. 1971ல் தோழர் கே.வரதராசன் திருச்சி மாவட்டத்தில் கட்சியில் இணைந்தார். ஸ்ரீரங்கத்தில் ஆச்சாரமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த அவர் அரசுப்பணிக்காக நெல்லைக்கு சென்றபோது, அங்கு கட்சியில் சேர்ந்தார். அரசுப் பணியை துறந்து திருச்சியில் கட்சி யில் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கி னார். திருவெறும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் அவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். கே.வரதராசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் இயக்கம் வளரத் துவங்கியது. அந்தக் காலத்தில் அவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது. துவாக்குடி, வாழவந்தான் கோட்டை, சூரியூர் போன்ற பகுதிகளில் கூலிப் போராட்டங்களை நடத்தி அதன்மூலம் விவ சாயிகள் சங்கத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர்.

கட்சியினுடைய பல்வேறு அரங்கங்க ளுக்குப் பொறுப்பாக, அவர் செயல்பட்ட போதி லும், பிரதானமாக அவர் தனது அரசியல் ஸ்தா பன வாழ்க்கை முழுவதிலும் ஒரு விவசாயி என்ற உணர்வோடு, விவசாய அரங்கப் பணி களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். கிராமப்புற விவசாயி களைத் திரட்ட வேண்டும், கிராமப்புற இந்தியா வில் ஒரு வர்க்க அணிசேர்க்கையை உருவாக்க வேண்டும், விவசாயிகள்-விவசாயத் தொழிலா ளர்களது உரிமைகளை முன்னிறுத்த வேண்டும் என்கிற முறையில் விவசாயிகளின் மூச்சாக தன்னை உருவாக்கிக் கொள்வதில் முனைப்பு டன் செயல்பட்டவர். கிராமப்புறங்களில் பெரும் நிலப்பிரபுக்கள், கந்துவட்டிகாரர்கள், பெரும்பணக்காரர்கள் ஆகியோரிடமிருந்து சிறு-குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமை களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதிலும், சிறு-குறு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும் அழுத்தமான கருத்துக்களை முன்வைத்தவர். சிறு-குறு, நடுத்தர விவசாயிகளின் வர்க்க நலனை அடிப்ப டையாகக் கொண்டே கோரிக்கைகள் அமைய வேண்டும், போராட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று உறுதியாக வழிகாட்டியவர். கிராமப்புற மக்களைத் திரட்டும் பணியில் ஈடு பட்டுள்ள ஒவ்வொரு ஊழியரும் இதனை பிர தான கடமையாக கொண்டு நிறைவேற்ற வேண்டுமென்பதிலும் கூர்மையாக செயல்பட்டவர், அதேபோல தமிழகத்திலும் சரி, அகில இந்திய அளவிலும் சரி, நிலச்சீர்திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்பதற்கான போராட் டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றியவர். தமிழகத்தில் 2006ஆம் ஆண்டில் விவசாயி கள் சங்கத்தின் சார்பில்நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா கோரி மிகப்பிரம்மாண்டமான போராட்டம்நடைபெற்றது. தமிழகம் முழு வதும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இப்போராட்டத்தில் தோழர் கே.வரதராசன் பொருத்தமான முறையில் வழிகாட்டியவர். இப்போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு பட்டா வழங்குவதற்கான அரசாணையையும், தரிசு மேம்பாடு திட்டத்தையும் அறிவித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் தோழர் கே. வரதராசன் அவர்களது பங்கும் வழிகாட்டலும் முக்கியமானது.

அதேபோல சிறு, குறு, நடுத்தர விவ சாயிகளும்,விவசாயத் தொழிலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதி லும், விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழி லாளர் சங்கமும் கிராமப்புற இந்தியாவில் கூட்டாக பல கோரிக்கைகளை கையிலெடுத்து அணிதிரட்ட வேண்டும் என்பதிலும் உறுதி யாக இருந்தார். விவசாயிகள் சங்க ஸ்தாபனப் பணிகள் மட்டுமல்லாமல், சித்தாந்த தெளிவுடன், கிரா மப்புற இந்தியாவில் அடிப்படை பிரச்சனை யாக இருக்கக்கூடிய சாதி, வர்க்கம் என்பதை மிகச்சரியாக மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்து முன்வைத்தவர் அவர். இந்தியாவில் அடிப்படையானது வர்ண வேறுபாடா அல்லது வர்க்க வேறுபாடா என்பது தொடர்பாக தொடர்ந்து பெரிய விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை எப்படி அணுக வேண்டும் என்கிற மிகச்சரியான புரிதல் அவருக்கு இருந்தது. வர்ணாசிரமம், பிராமணியம் ஆகிய வற்றை எதிர்த்து அவர் எழுதிய எழுத்துக்கள் சித்தாந்த தெளிவை அளிப்பதாக அமைந்தன. பிராமண குடும்பத்தில் பிறந்தவர்; சமஸ்கிரு தம் அறிந்தவர்; எனவே அவருக்கு இயல் பாகவே கிடைக்கப்பெற்ற வர்ணாசிரமம் தொடர்பான விசயங்களை உள்வாங்கிக் கொண்டு அதன் அநீதி குறித்து தெளிவாக ஆய்வுசெய்தார். அதேபோல கட்சி மற்றும் அரங்கங்க ளின் கமிட்டிக் கூட்டங்கள், மாநாடுகள் போன்ற வற்றில் மிகவும் ரத்தினச் சுருக்கமாக, அதே நேரத்தில் அணிகளுக்கு உணர்த்த வேண்டிய விசயங்களை கூர்மையாக உணர்த்தி, உணர்வுபெறச் செய்து பணியாற்றச் செய்வ தில் சிறப்பான பங்கினை ஆற்றினார். கட்சி ஸ்தாபனக் கூட்டங்களை நடத்துவதில் அவர் ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டார். மாறு பட்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வார். மாறுபட்ட கருத்துக் கூறிய தோழர்களோடு தனிப்பட்ட முறையில் அவர் ஒருபோதும் முரண் பட்டதில்லை. அவருடன் எந்தத் தோழராக இருந்தாலும் உரிமையோடு பேசலாம். உரிமை யோடு விமர்சிக்கலாம். அதேபோல அவரும் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பேசுவார். தோழமை என்பதன் சிறந்த இலக்கணமாக அவர் திகழ்ந்தார்.

குமரி முதல் இமயம் வரையுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விவசாய பிரச்சனைகளை முன்னெடுக்க செல்லும்போது அந்தந்த மாநில மொழிகளில் பேசுவதற்காக கடுமையான முயற்சி எடுத்துக்கொண்டவர்.அதன் விளைவாக மலையாளம், தெலுங்கு, கன்ன டம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அந்தந்த மாநிலத்தில் உரையாற்றும் தனித்திறன் கொண்டவர். இன்றைக்கும் மிகப் பிரம்மாண்டமான விவசாயிகள் பேரெழுச்சி நடந்து கொண்டி ருக்கிறது. 165 நாட்களை தாண்டி, தலைநகர் தில்லியை சுற்றியுள்ள அனைத்து எல்லை களிலும் பல்வேறு மாநில விவசாயிகள் முகா மிட்டு தங்களது முற்றுகையை தொடர்ந்து வருகின்றனர். கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு போராடி வருகிற அந்த விவசாயிகளின் போராட்டமும், தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதே; மோடி அரசால் உருவானதே! ராஜஸ்தானில் ஸ்ரீநகர் கங்கா நகர் உள்ளிட்ட மாவட்டங்களில், அப்போதிருந்த மாநில பாஜக ஆட்சிக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயி கள் அணிதிரண்ட போராட்டத்தை இன்றைய விவசாயிகள் எழுச்சி நினைவுபடுத்துகிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமை யில் விவசாயிகள் முற்றுகையிட்ட பின்னர்தான் ஸ்ரீகங்கா நகர் விவசாயிகளின் பாசன நீர் பிரச் சனை முடிவுக்கு வந்தது. அதேபோல இன்றைய விவசாயிகளின் எழுச்சிக்கு முன்னோடியான மகாராஷ்டிர விவசாயி களின் பேரெழுச்சி வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்தது. அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த இரண்டு மாபெரும் எழுச்சிகளின் பின்ன ணியில், மறைந்த தோழர் கே.வரதராசன் அவர் களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அனைத்து விவசாயிகள் அமைப்புகளையும் ஒன்று திரட்டி அவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கோரிக்கைகளை வென்றெ டுப்பது என்ற வழிகாட்டுதல் மிக்க போராட்டங் கள் ராஜஸ்தானில், மகாராஷ்டிராவிலும் நடந்தவை. அத்தகைய வெற்றி, தில்லி விவ சாயிகள் எழுச்சியிலும் கிடைக்கப் பெறும் என்பது உறுதி. அப்படிப்பட்ட ஒரு வெற்றி தோழர் கே.வரதராசன் அவர்களது நினைவு களை என்றென்றும் போற்றச் செய்யும்.

 

;