districts

img

அனகாபுத்தூர் குடியிருப்புகளை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

சென்னை, ஜூன் 1 - அனகாபுத்தூரில் அடையாறு கரையோர  குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார். தாம்பரம் மாநகராட்சி 1வது வார்டுக்கு  உட்பட்ட தாய் மூகாம்பிகை நகர், டோபி கானா தெரு, சாந்தி நகர், 3வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டாலின் நகர், காயிதேமில்லத் நகர் பகுதி குடியிருப்புகளை அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் குடியிருப்பு பகுதிக ளில் மே  30, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நோட்டீஸ் கொடுக்க வந்தனர். அதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த நிலையில் வியாழனன்று (ஜூன் 1) குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற ஊர்க் கூட்டங்களில் ஆர்.வேல்முருகன் பேசுகையில், “அனகாபுத்தூர் பகுதியில் தவறான வரைபடத்தின் அடிப்படையில் அடிப்படையில் ஆற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்கின்றனர். 800 குடியிருப்பு களை அகற்ற எடுக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார். “ஆக்கிரமிப்புகள் என்று ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றிய ஒரு இடத்தில் கூட மீண்டும் நீர்நிலைகளை உருவாக்கவில்லை. எனவே, எளிய மக்களின்  வாழ்வாதாரத்தை பறிக்கும் முயற்சியை  அரசு கைவிட வேண்டும். தற்போதுள்ள  நிலையில், வெள்ள தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணைப்படி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வின்போது கட்சியின் பல்லா வரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, பகுதிக்குழு உறுப்பினர் ஜி. ராஜேந்திரன், வெங்கட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;