இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா: வட்டாட்சியர் உறுதி
திருவள்ளூர், ஏப்.20- திருத்தணி பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததால் காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட கோரமங்களம், பெரிய கடம்பூர், பீரகுப்பம், செருக்கனூர், வீரகநல்லூர் ஊராட்சி பகத்சிங் நகர், வி.கே.புரம், தாகூர், ஆகிய ஊராட்சிகளில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல போராட்டங்கள் நடை பெற்றன. இதன் விளைவாக 203 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 95 குடும்பங்களுக்கு குடிமனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (ஏப்.19) திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடை பெறும் என அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றது.மேற்கண்ட ஊராட்சிகளில் குடியிருக்கும் இருளர் இன மக்களின் பகுதிக்கு சென்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கு வதற்கான விசாரணை முடி வுற்று, பிரேரணை தயார் செய்யப்பட்டு, நில அளவை பிரிவில் நடவடிக்கையில் உள்ளது. அடுத்த இரண்டு மாதத்தில் பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் விஜயராணி, எழுத்து பூர்வ மாக உறுதியளித்தார். இந்த நிலையில் காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. இதில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டக் குழு உறுப்பினர் வி.அந்தோணி, ஒன்றிய தலைவர் பார்த்திபன், செயலாளர் ஜி.மணிகண்டன் மற்றும் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீ விபத்து தடுப்பு ஒத்திகையால் பரபரப்பு
மீனம்பாக்கம், ஏப். 20- சென்னை விமான நிலையத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டால், தீயை உடனடியாக அணைப்பது, பாதிக்கப்பட்டவர்களை விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பது போன்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இது ஒத்திகை போன்று தெரியாமல், தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சென்னை விமான நிலைய தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் ஏற்பட்ட பரபரப்பு தான் என பிறகு தெரியவந்தது.
பெண்கள் மட்டுமே இயக்கும் ‘பைக் டாக்சி’
சென்னை,பிப்.20- சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கொண்டு வரப்பட்டதுதான், மெட்ரோ ரயில் சேவை. சென்னையின் பிரதான போக்குவரத்து பயணங்களில் ஒன்றாக இந்த ரயில் சேவை தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்து வந்த நிலையில், தற்போது, 2.5 லட்சம் பேர் தினமும் பயணிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் சில வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை கொண்டுவருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்து முழுமையாக நிறைவு பெற்றதும், சென்னையில் மெட்ரோ ரயில், போக்குவரத்து சேவைகளில் முக்கிய இடத்தை பிடித்துவிடும். சொகுசு பயணம், குறைந்த நேரத்தில் பயணம் என பல்வேறு அம்சங்களை கொண்டதால், பலரும் இதனை விரும்புகிறார்கள். பைக் டாக்சி இப்படிப்பட்ட பயண அனுபவத்தை கொடுக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ‘ரேபிடோ’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய ‘பைக் டாக்சி’ முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளது. பெண் பயணிகளுக்காக, பெண்களால் இயக்கப்படும் இந்த ‘பைக் டாக்சி’ முதற்கட்டமாக சென்னை நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் இருந்து வெளியே வரும் பெண் பயணிகள், குறிப்பிட்ட இடங்களுக்கு பயணிக்க இந்த பைக் டாக்சியை அதற்கான செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதற்காக இந்த ரயில்நிலையங்களில் விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ நிர்வாகத்தின் இந்த முயற்சிக்காக ரேபிடோ நிறுவனம், பிரத்யேகமாக பெண் ‘பைக் டாக்சி’ ஓட்டுநர்களை நியமித்து இருக்கிறது.
அம்பத்தூர் தொகுதியில் 9 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கப்படும்
சட்டசபையில் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை,ஏப்.20- அம்பத்தூர் தொகுதியில் 9 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறி வித்துள்ளார். வியாழனன்று சட்டசபையில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் பேசுகையில், "அம்பத்தூர் தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க அரசு முன் வருமா?" கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "அம்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் ஆவடியிலும், 13 கி.மீ. தூரத்தில் கே.எம்.சி. மருத்துவமனையும் உள்ளது. இது தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி மருத்துவ மனைகளும், மருந்தகங்களும் உள்ளன. எனவே அம்பத்தூரில் பொது மருத்துவமனை அமைக்க அவசியம் இல்லை" என்றார். மேலும்"முதலமைச்சர் ஏற்கனவே 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் 703 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் 200 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 191 வார்டுகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு 160 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டும் பணி தற்போது நிறைவடைய உள்ளது. 160 மருத்துவர்கள், 160 செவிலியர்கள், 160 மருத்துவ உதவியாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடக்கிறது. அம்பத்தூர் பகுதியில் பாடி, கொரட்டூர், அத்திப்பட்டு, மேனாம்பேடு, முகப்பேர் தெற்கு, முகப்பேர் கிழக்கு, ஒரகடம், வரதராஜ புரம், வெங்கடாபுரம் ஆகிய 9 இடங்களில் மருத்துவமனைகள் புதிதாக அமைய உள்ளது. சென்னையில் 170 சிறிய மருத்துவமனைகள், தமிழ்நாடு முழுவதும் 450 சிறிய மருத்துவமனைகள் என 600-க்கும் மேற்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களை விரைவில் முதலமைச்சர் திறக்க உள்ளார் என்றார்.
கொள்ளையன் கைது
திருவள்ளூர்,ஏப்.20- திருவள்ளூரை அடுத்த வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மேஷாக் என்பவர் வீட்டில் 17 சவரன் நகை கொள்ளை போனது. இது குறித்து நடத்திய விசா ரணையில் செங்குன் றத்தைச்சேர்ந்த சிபி என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
போலி மருத்துவர்கள் கைது
காஞ்சிபுரம்,ஏப்.20- காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லா மல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் கோபிநாத் தலை மையில் காஞ்சிபுரம் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். இந்த திடீர் சோதனை யில் காஞ்சிபுரம் நிமிந்த கரை தெருவை சேர்ந்த சுதர்சன்பாபு மற்றும் காஞ்சி புரம் காமாட்சி யம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சேஷாத்திரி ராஜீ ஆகிய இருவரும் எந்தவித தகுந்த மருத்துவ படிப்பும் இல்லா மல், போலி டாக்டர்க ளாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலி டாக்டர்கள் இரு வரும் கைது செய்யப்பட்ட னர்.
ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ராணிப்பேட்டை, ஏப். 20- ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரத்தின கிரி பகுதியில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நவாப் நகர் மசூதி அருகே உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்த போது, அங்கு ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதைய டுத்து காவல் துறையினர் அங்கிருந்த இம்ரானை (29) கைது செய்து, அங்கிருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ராணிப் பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
விழுப்புரம், ஏப். 20- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (48). இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் புதன்கிழமை இரவு தான் சொந்தமாக கட்டிவரும் வீட்டில், கைப்பிடி இல்லாத மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் எழுந்த அவர், தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திறந்தவெளி உணவகம் மீண்டும் திறக்கப்படுகிறது
வேலூர், ஏப். 20- வேலூர் சிறை அருகே சிறைத்துறை சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு சிறை அங்காடி திறக்கப்பட்டது. இதில் காய்கறி, மீன்கள் விற்கப்பட்டன. அதனருகே நவீன முடிதிருத்தகம் மற்றும் திறந்தவெளி உணவகம் திறக்கப் பட்டது. அழகான புல் வெளியுடன் அமைக்கப்பட்ட திறந்த வெளி உணவகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் நிர்வாக குளறுபடியால் இவை அனைத்தும் மூடப்பட்டன. சிறை எதிரே புல்வெளியுடன் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே உணவகம் இருந்த இடம் புதுப்பிக்கப்படுகிறது. அந்த இடத்தில் புதியதாக காம்பவுண்ட் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது. திறந்தவெளி உணவகத்தில் காலை டிபன், மதியம் வெரைட்டி சாதம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள் ளனர். கைதிகளால் நடத்தப்படும் இந்த உணவகத்தில் மற்ற உணவகங்களை விட குறைந்த விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படும். விரைவில் உணவகம் திறக்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கு தேர்வு
திருவண்ணாமலை, ஏப். 20- தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் இலவச மருத்துவ சேவைக்கான 108 ஆம்புலன்சு வாகனங்களில் பணிபுரிய மருத்துவ உதவி யாளர்கள், ஓட்டுநர்கள் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முகாம் திருவண்ணா மலை அரசு மருத்துவக்கல்லூரி கலை யரங்கத்தில் வரும் சனிக்கிழமை (ஏப். 22) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. நர்சிங், டி.எம்.எல்.டி., பி.எஸ்சி. அறிவியல் பிரிவு பட்டப்படிப்பு முடித்தவர்கள் பணிக்கு தகுதியுடைய வர்கள். 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.15,435 வழங்கப்படும். அதேபோல் ஓட்டுநர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்கள் தகுதி யானவர்கள். ஓட்டுநர் பணிக்கு ரூ.15,235 மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியுள்ள, ஆர்வமுள்ள நபர்கள் நேரடி பணி நியமன தேர்வில் பங்கேற்கலாம்.