கடலூர்,ஜூன் 2- பலா மேம்பாட்டு குழு சார்பில் பண்ருட்டியில் 2024 பலா திருவிழா நடைபெற்றது .500 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பண்ருட்டியில் பலா மேம்பாட்டுக்குழு மற்றும் தமிழ்காடு வேளாண்மை இயக்கம் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்ருட்டி பலா திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பண்ருட்டி பாலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும், மதிப்பு கூட்டுதல் செய்து சந்தைப்படுத்தி வருமானத்தை பன்மடங்காக பெருக்கவும், பல உழவர்களின் பட்டறிவை பகிரும் நிகழ்வும் நடைபெற்றது. மேலும் பலாவின் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சி, விற்பனையும் மற்றும் ஆலோசனைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள், நாட்டு சர்க்கரை, மரச்செக்கு எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள், சூழலுக்கு உகந்த பல்வேறு வடிவங்களில் கருத்துக்களை தாங்கிய துணிப்பைகளும் நிகழ்வில் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் மரபு நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களில் விதைகளும் இடம் பெற்றது. நிகழ்வில் அதிக சுவையுடைய மற்றும் அதிக எடை உடைய பலாவின் உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.