districts

img

நூறு நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

சித்தாமூர், ஆக. 5 - செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தொடர்ந்து நூறு நாள் வேலை வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூனாம்பேடு, கொளத்தூர், வன்னியநல்லூர், போந்தூர், அகரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்க ளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நூறு நாள் வேலை வழங்கப்படாமல் உள்ளது.  அவ்வாறு வழங்கினாலும் 20 முதல் 50 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக  கூறப்படுகின்றது. மேலும் பணி செய்து  முடித்த பலருக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. பணி வழங்கப்படாதவர்களுக்கு பணி செய்வதற்கான உத்தரவு வழங்கு வதற்கு லஞ்சம் கேட்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நூறு நாள் வேலையை எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து பணி  வழங்கிட வலியுறுத்தியும், பணிக்கு அதி காலை அழைத்து அலைகழிப்பது கைவிட வலியுறுத்தியும் முழுமையான ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டம்  குழுவின் சார்பில்  சித்தாமூர் வட்டார  வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகை  போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் தில் 15 கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.  கட்சியின் செய்யூர் வட்டச் செயலாளர்  எஸ்.ரவி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.வாசுதேவன், க.புருசோத்தமன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, ராஜேந்திரன், ஆர்.ராஜேந்திரன், மோகன், வரதராஜன், வெள்ளிகண்ணன், சாந்தி,  கிளை செயலாளர்கள் ஜம்புலிங்கம், ரேனுகா, ஜானகி, மகாலட்சுமி, ஐயப்பன், சுதா, மகாலட்சுமி, கனகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளர் ஆகியேர் எழுத்துப்பூர்வமாக அடுத்த வாரத்தில் இருந்து தொடர்ந்து நூறு  நாட்களுக்கு பணி வழங்கப்படும், நிலுவை யில் உள்ள ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்த பேரில்   போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

;