சென்னை, ஜூலை 26- சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக 22 பற்கள் இருந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவருக்கு செய்யப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் அவரது எலும்பில் கூடுதலாக 22 பற்கள் இருப்பதும் இதன் காரணமாக அவரது பற்கள் சீராக இல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. முக மற்றும் தாடை அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த டாக்டர் ரூபின் எஸ். ஜான் மற்றும் டாக்டர் கௌதம் விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான அறுவை சிகிச்சை குழு, நோயாளிக்கு பொது மயக்க மருந்தை கொடுத்து கூடுதல் பற்களை அகற்றும் சிகிச்சையை செய்து முடித்தது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. ஒருவருக்கு கூடுதல் பற்கள் இருப்பது என்பது ஹைபர்டோன்டியா என அழைக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை மற்றும் இருப்பிடம் மாறுபடும், ஆனால் 22 கூடுதல் பற்கள் இருப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர். பல் எக்ஸ்ரே பரிசோதனையின் போது அல்லது நோயாளிகளுக்கு அசௌகரியம் அல்லது மெல்லுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரிய வரும்போது இது கண்டறியப்படுவதாகவும் அவர் கூறினார்.