districts

ஆடு மேய்த்தவர் யானை தாக்கி பலி

கிருஷ்ணகிரி,ஆக. 7 -

       கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே ஜவளகிரி அடுத்த மிலிதிக்கி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்.  51 வயதான இவர், ஆடு வளர்த்து வந்தார்.

     அந்த ஆடுகளை மேய்க்க ஜவளகிரி வனச்சரகம் உளிபண்டா வனப்பகுதிக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வனச்சரக அலுவலர்களுக்கும், காவல் துறையினருக்கும் மக்கள் தகவல் தெரிவித்தனர்.

     பின்னர், ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பிறகு,காவல் மற்றும் வனத்துறையினர் தேடுதலில், தங்கவேலுவின் உடல் வனப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

     மேலும் யானை மிதித்து தும்பிக்கையால் தூக்கி வீசியும் தாக்கியதில் ஆடு மேய்க்க சென்ற தங்கவேல் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.