திருவண்ணாமலை,ஆக.10- திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் போக்குவரத்து துறை சார்பாக 6 நகரப் பேருந்து மற்றும் 26 புறநகரப் பேருந்துகள் என மொத்தம் 32 புதிய பேருந்துகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். மேலும், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 24 புதிய வாகனங்களை அலுவலக பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மக்களவை உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திரு வண்ணாமலை), எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி), சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஓ.ஜோதி (செய்யார்), மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனி வாசன், அரசு போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர் க.குணசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.