திருநெல்வேலி, ஜுன் 16- ஊட்டி, கொடைக்கானல் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் சுற்றுலா வணிகத் தலங்களாக மாறி பெரும் பெரும் கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், இயற்கையைப் பாதுகாப்பதில் எவ்வித சரசமும் செய்து கொள்ளாத பகுதி மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் என்கிற ‘சிங்கம்பட்டி எஸ்டேட் தேயிலைத் தோட்டம்’ ஆகும். இது காக்கச்சி, ஊத்து, குதிரை வெட்டி, நாலுமுக்கு, மாஞ்சோலை ஆகிய ஐந்து ஊர்களை உள்ளடக்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக் கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தை வாடியா குழு மத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்திய விடுதலைக்கு முன்பே 1929-ஆம் ஆண்டு இந்தத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 வருட குத்தகைக்கு பி.பி.டி.சி.எல் நிறுவனம் எடுத்துக் கொண்டது. இங்கு தேயிலை, ஏலக்காய், கொய்னா, மிளகு தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. காப்புக் காடுகளாக... விடுதலைக்குப் பிறகு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த நிலங்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. அதன்படி சிங்கம்பட்டி ஜமீன் நிலமும் அரசுக்கு சொந்த மானது. எனினும் பி.பி.டி.சி.எல் நிறுவனம் பெற்றிருந்த குத்தகை உரிமம் மட்டும் நீட்டிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த குத்தகை காலம், 2028-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரு கிறது. அதற்குப் பிறகு, இந்த வனப்பகுதி தமிழ்நாடு அரசின் வசம் சென்றுவிடும். மாஞ்சோலை தோட்டத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தப் பகுதியையும் பாது காக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப் படவுள்ளது.
தவிக்கும் குடும்பங்கள்
குதிரைவெட்டி, காக்கச்சி ஆகிய இடங்களில் இருந்த தோட்டங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மீத முள்ள ஊர்களில் உள்ள தேயிலைத் தோட்டங் களும் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன. இத னால் நான்கு தலைமுறைகளாக இங்கு வேலை செய்து கொண்டு நெருக்கமான லயன் வீடுகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத தவிப்பில் உள்ளன. பி.பி.டி.சி.எல். நிறுவனத்திற்கு சுமார் 8,373 ஏக்கர் நிலம் குத்தகைக்கு அளிக்கப்பட்டாலும், அதில் சுமார் 1500 ஏக்கர் நிலத்தில் மட்டுமே தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டு வந்தன. இதில் ஒருபகுதி நிலத்தில், தோட்டப் பணியாளர்களின் குடியிருப்புகள் உள்ளன. அவற்றை காலி செய்துவிட்டு எங்கே செல்வது என்பதுதான் அவர்களிடம் எழும் விடை தெரியாத கேள்வி. 2028-க்குள் நிலத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால், இதில் பணியாற்றிவந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு முதலில் 25 சதவிகிதம் பணம் தரப்படும். ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் தங்கள் குடி யிருப்பைக் காலி செய்து அதற்கான சாவியை ஒப்படைக்க வேண்டும். அப்போது மீதமுள்ள 75 சதவிகிதம் பணம் தரப்பட்டுவிடும். இந்தப் பின்னணியில் கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்ட ஜூன் 14-ஆம் தேதி தொழி லாளர் குடியிருப்பு முழுவதும் துயரத்தில் மூழ்கியது.
உலகப் புகழ்பெற்ற தேயிலை
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் கூறுகையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசு ஏற்று, எடுத்து நடத்த வேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களுக்கான வாழ்வா தாரம் பாகாக்கப்பட வேண்டும். மாஞ்சோலை தேயிலையின் தரம் உலக அளவில் புகழ் பெற்றது. எனவே, ‘டேன்டீ’ நிறுவனம் வழியாக சந்தைப்படுத்தவும் நிறுவனத்தை லாபகரமாக நடத்தவும் வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கனரகத் தொழில்களோ அதிக அளவில் வேலை வாயப்பை வழங்கும் நிறுவனங்களோ இல்லாத நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசுடமை ஆக்கி ஆயிரக் கணக்கானோரது வேலை வாய்ப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்றார். “தொடக்க காலங்களில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் சுமார் 8 ஆயிரம்பேர் பணியாற்றியுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள். கேரளத்திலிருந்தும் சிலர் வந்து சேர்ந்துள்ளனர். தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த வர்கள். தற்போது இந்த பி.பி.டி.சி.எல். நிறுவனத்தில் 562 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 2,000 பேர் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் தபால் அலுவலகம், தொலைபேசி டவர்கள், ரேஷன் கடைகள், அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், கூட்டுறவு பண்டக சாலை, எஸ்டேட் நிர்வாகத்திற்குப் பாத்தியப்பட்ட தேயி லைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு கள், தேயிலைத் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள், வனத்துறை விடுதி, சிங்கவால் குரங்கு கண்காணிப்பு கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் குடியிருப்புகளும் உள்ளன. வனத்துறை வசம் ஒட்டுமொத்த நிலமும் ஒப்படைக்கப்பட்டால் இவை அனைத்தும் கைவிடப்படும் நிலை ஏற்படும்” என்றும் அவர் கூறினார்.
17 தொழிலாளர்கள் பலியான துயரம்
மாஞ்சோலை தொழிலாளர்கள் மிக குறைந்த கூலிக்கு கடுமையாக சுரண்டப்பட்டு வந்தார்கள். குறைந்தபட்ட சம்பளமாக ரூ.100 வழங்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட தொழிலாளர்கள் முயன்றனர். 1999 ஜுலை 23 ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் திரண்ட மக்கள் மீது தடியடி நடத்தியும் ஆற்றுக்குள் மூழ்கச் செய்தும் காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளர் வீ.பழனி உள்ளிட்ட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் மாஞ்சோலை தொழிலாளர்களின் பிரச்சனை கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் தற்போது அந்த நிறுவனமே மூடப்படுகிறது. தொழிலாளர் வாழ்க்கை அஸ்தமனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.