districts

img

தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியேற்போம்

சென்னை, மே 8-தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசியல் மாற்றத்தை உருவாக்க தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என்று தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.தொழிற்சங்க மேதை தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி புதனன்று (மே8) பெரம்பூர் ஏ.பி.நினைவகத்தில் நடைபெற்ற வே.மீனாட்சிசுந்தரம் எழுதிய ‘நான் கண்ட 3 ஆசான்கள், நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் முதற்பிரதியை வெளியிட வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், “இந்தியாவிலேயே முதற் தொழிற்சங்கமான மெட்ராஸ் லேபர் யூனியனை உருவாக்கிய தலைவர்களான சிந்தனைசிற்பி சிங்காரவேலர், தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம், சர்க்கரைச் செட்டியார் ஆகிய மூவரின் பணிகளை  வி.பி.சிந்தன், பி. ராமமூர்த்தி, கோ. வீரய்யன்ஆகியோர் திறம்பட செய்து முடித்தனர். இந்திய தொழிலாளர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர்களை முன்மாதிரியாக கொண்டு இம்மூன்று பேரும் செய்த இயக்க வேலைகளை தொழிலாளர்களிடம் கொண்டு செல்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கம் பெரிய அரசியல் சக்தியாக மாறவேண்டும். தவறான அரசியல் வாதிகள் பின்னால் சென்று அழிந்துவிடக்கூடாது. ஆகவே தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே நம் இலக்கு” என்றார்.

அ.சவுந்தரராசன்

சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “தொழிலாளர் களுக்காக தன் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் தானமாக தந்த தோழர் விபிசிநினைவு நாளில் மாநிலம் முழுவதும் ரத்ததான முகாம் நடத்துவது சிறப்பான விஷயமாகும். தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் தான் விபிசி தொழிற்சங்கத்தலைவராக பணிசெய்ய வந்தார். சிம்சன் தொழிலாளி முதலாளிகளால் கொல்லப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் தனித்தனியாக இயங்கிவந்த போராட்டத்தை மையக்கருவாக குவித்து ஒரே போராட்டமாக மாற்றினார். கே.ரமணி, ஆர்.உமாநாத், குசேலர் உள்ளிட்ட தலைவர்களை கலந்தாலோசித்து மாநிலம்தழுவிய போராட்டமாக மாற்றி தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கச்செய்தவர் வி.பி.சிந்தன்” என்றார் அவர்.கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய சிஐடியு வடசென்னை மாவட்டத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன், யார் கத்தியால் குத்தினாரோ அவரே தலைவராக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தொழிலாளர்களை தனது பணியால் அன்பால் வென்றெடுத்தவர் தோழவர் விபிசி என்றார். 

நினைவிடத்தில் அஞ்சலி 

முன்னதாக தோழர் விபிசிந்தன் 32வது நினைவுநாளையொட்டி பெரம்பூர் குக்ஸ்சாலையில் உள்ள ஏ.பி.நினைவத்திலிருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.குப்புசாமி வரவேற்றார். போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஏ.பி.அன்பழகன், கே.ஆறுமுகநயினார், தயானந்தன் மற்றும் எல்.சுந்தரராசன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் ஆர்.மணிமேகலை நன்றிகூறினார்.


;