கோயம்புத்தூர், மார்ச். 13 - அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு வரிசை யில் புதிதாக மோடியின் புளுகு இடம் பெற்றுள்ளதாகவும், எதையும் செய்யாம லேயே செய்ததாக சொல்வதுதான் மோடி யின் புளுகு என்றும் முதல்வர் மு.க. ஸ்டா லின் விமர்சித்துள்ளார்.
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான முடிவுற்ற திட்டப் பணிகளின் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பய னாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நலத்திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையா ற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
எந்த தேர்தலிலும் வெற்றி நமக்குத்தான்
இந்த நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலானாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது.
கோவை மாவட்டத்துக்கு இதுவரை 4 முறை வந்திருக்கிறேன். 1,48,949 பேருக்கு ரூ. 1441 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி கள் வழங்கியிருக்கிறேன். இன்று 5 ஆவது முறையாக வந்திருக்கிறேன். மூன்று ஆண்டு கால ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48, கள ஆய்வில் முதலமைச்சர், மக்களுடன் முதல்வர், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் நீங்கள் நலமா திட்டம் என தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டிற்கு உதவும் ஒன்றிய அரசை அமைப்போம்!
உங்கள் ஒவ்வொருவரின் உணர்வை யும் மதிப்பவன் நான். உங்களின் கருத்துக் களை காதுகொடுத்து கேட்பவன் நான். மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவ தால் தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் உயர்கிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது. பொருளாதாரம் வளர்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளர்கிறது.
இதனைபொறுத்துக்கொள்ள முடியாத சிலர், பொய்களை மட்டும் பேசும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியை உயிர் மூச்சாக கொண்டு குறைசொல்லி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் வந்து பொய்களைச் சொன்னால், அதை நம்ப தமிழ்நாட்டு மக்கள் என்ன ஏமாளிகளா? ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே இவ்வளவு திட்டங்களையும் தீட்ட முடியும் என்றால், நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அரசை ஒன்றியத்தில் தேர்ந்தெடுத்தால் இன்னும் பத்து மடங்கு திட்டங்களைக் கொண்டு வர முடியும்.
மோடி ஏற்கெனவே கொடுத்த கேரண்டி என்ன ஆனது?
நாட்டு மக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், இப்போது ‘மோடியின் உத்தர வாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். நான் கேட்பதெல்லாம் ஏற்க னவே நீங்கள் கொடுத்த உத்தரவாதங்கள் என்னவானது? ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம், வருடத்திற்கு 2 கோடி இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற உத்தர வாதத்தின் கதி என்ன? அதைச் சொல்லுங் கள். அடுத்த வாரம் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரிடம் அவர் தந்திருக்கும் திட்டங்கள் என்ன என்று மக்கள் அவரிடம் கேட்க வேண்டும்.
தடுக்கும் அளவிற்கு மோடி தந்த திட்டம் தான் என்ன?
தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை திமுக தடுப்பதாக, சென்ற முறை வந்த போது பிரதமர் கூறினார். நாம் தடுப்பதற்கு, அவர் என்ன திட்டத்தைக் கொண்டு வந்தார்? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று அவரால் சொல்ல முடியுமா? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய அறிவிப்பை 2014-ல் அறிவித்தீர்கள். அதனை யார் தடுத்தார், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவா அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்சா என சொல்ல வேண்டும். ஆட்சியில் இருந்த 10 ஆண்டு கள் திரும்பிப் பார்க்காமல், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து பொய் களைச் சொன்னால், அதை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா? பொய்களும், வாட்ஸ்- ஆப் கதைகளும் தான் பாஜகவின் உயிர்மூச்சு. இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது.
நம் மண்ணை, தமிழை, பண்பாட்டை, வரலாற்றை பழிப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் ஒரு கோப்பில் கையெழுத்து போடு கிறேன் என்றால் கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றுபொருள்.
மேற்கு மண்டலத்திற்கு அதிமுக செய்தது என்ன?
10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடத்தியது. நான் சொன்னதைப் போன்று அவர்களது ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட முடியுமா? வாக்களித்த மக்க ளுக்கு அதிமுக ஏதாவது செய்ததா? மேற்கு மண்டலத்துக்கு அவர்கள் செய்தது என்ன? மகள்களைப் பெற்ற பெற்றோர்களைப் பதறவைத்தது பொள்ளாச்சி சம்பவம். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பெண்ணின் பெயர், முகவரியை வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சி அதிமுக வுடையது.
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். குட்கா, கஞ்சா, மாமுல் போன்ற குற்றப் பட்டியலில் அமைச்சரும், டிஜிபியும் இருந்தது அதிமுக ஆட்சியில் தான். அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணி தான் இன்று உத்தமர் வேஷம் போடுகின்றது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக இவ்விழாவில், 4 மாவட்டங் களில் 560 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 273 திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப் பட்டன. மேலும், 489 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 223 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57 ஆயிரத்து 325 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.
பாஜக - அதிமுக கள்ளக் கூட்டணி
மாநிலத்தைக் கெடுத்த அதிமுக - மாநிலத்தை கண்டு கொள்ளாத பாஜக. இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தயாராகிவிட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! இந்தியாவை காப்போம்.