districts

ஊழலை மறைக்க பத்திரிகையாளர்களுக்கு பணமா? கோவை பாரதியார் பல்கலை. நிர்வாகத்திற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. கண்டனம்

கோவை, மே 16-  செய்தி சேகரிக்க வந்த  பத்திரிகையாளர்களுக்கு பணம்  வழங்கிய கோவை பாரதியார்  பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாரதியார் பல்கலைக்கழகத் தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றுள்ளது. படித்து  முடித்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கும் இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை யாளர்களுக்கு  பணம் வழங்கப்பட்டதாக வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றமும் கண்டித்துள்ளது.  நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்று இருந்த நிலையில்  செய்தி வெளியிட லஞ்சமாக பல்கலைக்கழக நிர்வாகம் ஆயிரக்கணக்கில்  பணம்   கொடுப்பது எந்த செலவு கணக்கில்  எழுதப்படும் என்ற கேள்வி எழுகின்றது. எந்த  ஊழலை மறைக்க வேண்டும் என்பதற்காக பணத்தை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து பல்கலைக்கழக நிர்வாகம்  வேண்டுகோள் விடுக் கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.  பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்தது தமிழக ஆளுநருக்கு தெரிந்து நடைபெறுகின்றதா? இதுதான் பல்கலைக்கழகத்தின் நடைமுறையா? எதை மறைக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கருதுகின்றது.

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில்  வேந்தர்களும், துணை வேந்தர்களும் பல முறைகேடுகளில்  ஈடுபட்டதாக விசாரணை  நடந்து கொண்டிருக்கும் போது, இவ்வளவு பகிரங்கமாக பல்கலைக்கழகத்தின் மேடையில் தமிழக ஆளுநரும், உயர் பொறுப்பில் இருப்பவர்களும் அமர்ந்திருக்கும் போதே நிகழ்ச்சி அரங்கின் இடத்தில் வைத்து  பணம் கொடுப்பதன் மூலம் அங்கு இருந்த மாணவ, மாணவிகளுக்குபல்கலைக்கழக நிர்வாகம் எதை சொல்லிக் கொடுக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. நிமிர்ந்த நன்னடையும் ,  நேர்கொண்ட பார்வையும் என கவி பாடிய பாரதியின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில், லஞ்சத்திற்கு எதிரான சிந்தனைகளை உருவாக்காமல்,  லஞ்சத்தை வளர்க்கும்  விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும். அதேநேரத்தில்  நடவடிக்கை எடுக்கிறோம் என்கிற பெயரில் கண்துடைப்பாக கடை நிலை ஊழியரை பலிகடா  ஆக்காமல் உரிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

;