தருமபுரி, டிச.10- இலக்கியம்பட்டி ஊராட்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இலக்கியம் பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் சரவணனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. தருமபுரி ஒன்றியம் இலக்கியம் பட்டி ஊராட்சி மிகப் பெரிய ஊராட்சியாகும் இந்த ஊராட்சி தருமபுரி நகரத்தை யொட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியும் தருமபுரி நகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சியில் குடி நீர் சாலை வசதி,கழிவுநீர் கால்வாய்,தெருவிளக்கு சுடுகாட்டு வசதி கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக பனந்தோப்பு சுடுகாட்டிற்கு மின் விளக்கு அமைத்து தர வேண்டும். வி.ஜெட்டிஅள்ளி அனைத்து பகுதிக்கும் சாக்கடை கால்வாய் அமைத்துதரவேண்டும். சக்தி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள மினிடேங்க் பயன் படுத்த உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதிக்கு சுடுகாடு வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை மனுவை, மார்க்சிஸ்ட் கட்சியின் தரும புரி ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் கே. பூபதி,கே.குப்புசாமி ,கிளை செயலாளர் பழனி,தமிழ்மணி, ஆகியோர் கொடுத்தனர்.