districts

img

டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு - பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம்

கோவை  நாச்சிபாளையம் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி  கல்லூரி மாணவர்  உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை  அடுத்த பாலத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் நவீன்குமார் (20) திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை நவீன்குமார் தனது இரு சக்கர வாகனத்தில் நாச்சிபாளையத்திலிருந்து பாலத்துறைக்கு நோக்கிச் சென்றார். நாச்சிபாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலை ஓரத்தில் மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த தனியார் பள்ளி பேருந்தின் பின்னால் , நவீன்குமார் இருசக்கர வாகனத்தை நிறுத்தி நின்றுள்ளார். இந்நிலையில் பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நவீன்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நவீன்குமார் முன்னாள் இருந்த பள்ளி பேருந்து கண்ணாடியில் மோதி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் இருந்த ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்த பிரமேஷ் (15), நாச்சிபாளையத்தைச் சேர்ந்த சாலுமித்ரா (12) ஆகிய இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் நவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், டிப்பர் லாரி ஓட்டுநரான மீனாட்சிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;