districts

உதகைக்கு சுற்றுலா பயணிகள் ஏப், மே-யில் 8.61 லட்சம் பேர் வருகை

உதகை, ஜூன் 1-  கோடை விடுமுறையையொட்டி உதகை பூங்காவிற்கு ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 8.61 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதியன்று துவங்கி ஏப்ரல் 20ஆம் தேதியன்று நிறைவு பெற்றது. இதையடுத்து விடுமுறை விடப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டிற்கான கோடை விழா நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12ஆவது காய்கறி கண்காட்சி மே 6 துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. மே 12 முதல் 14ஆம் தேதி வரை கூடலூரில் 10 ஆவது வாசனை திரவிய கண்காட்சி நடைபெற்றது. மே 13,14,15 ஆகிய தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18ஆவது ரோஜா கண்காட்சி நடைபெற்றது. மேலும், புகழ் பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125ஆவது மலர் கண்காட்சி மே 19 முதல் 23ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் நடைபெற்றன. மே 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63ஆவது பழக் கண்காட்சி நடைபெற்றது. கோடை விழாவையொட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகையில் குவிந்தனர்.  இந்நிலையில், உதகை தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் 8.61லட்சம் பேர் வருகை தந்தனர். இதன் மூலம் ரூ.4.73 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்தாண்டு கோடை விடுமுறையைவிட 1.27 லட்சம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;