districts

img

கீழக்குறிச்சி பள்ளியில் வகுப்பறை அமைக்க மாணவர்கள் கோரிக்கை  

கடலூர், பிப். 5- கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 164 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்த பள்ளி கடந்த 2008ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. அதன்படி நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயில்கின்றனர். உயர்நிலை பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லாததால் மழை, வெயில் காலங்களில் நடுநிலை பள்ளி வளாகத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் அவல நிலை உள்ளது. மேலும் இந்த பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த நிதியை பயன்படுத்தி கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம், கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் கிராம சபை கூட்டத்தின் வாயிலாகவும், பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அந்த பள்ளி மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால் கிராம மக்களோடு இணைந்து சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

;