districts

வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது

உதகை, ஜூலை 29- உதகையில் வறுமை காரணமாக பெற்ற குழந்தைகளையே சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த பெற்றோர் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகை காந்தல் பகவதியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மோனிஷா (26), ராபின் (29) ஆகிய இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இந்நிலையில், இவர்களுக்கு கொரோனா காலங்களில் வாழ்வாதாரம் இன்றி இருந்ததாகவும், வீடு மழையினால் சேதமடைந்ததாகவும் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் 3 வயதுடைய முதல் பெண் குழந்தையை மோனிஷாவின் அக்கா பிரவீனாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும், ராபினின் நண்பர் உதவியுடன் திருப்பூரைச் சேர்ந்த முகமது பாரூக் என்பவருக்கு இரண்டாவது குழந்தையான ஒன்றரை வயது பெண் குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கும், சேலம் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, பூபதி தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், குடிபோதையில் ராபின் மற்றும் மோனிஷா இருவரும் பிரவீனா வீட்டிற்கு சென்று குழந்தையை தரும்படியும், அந்த குழந்தையை விற்க வேண்டும் என்றும் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீனா, காந்தல் பாரதியார் அறக்கட்டளை கிளை அலுவலகத்தில் உள்ள வழக்கறிஞர் கங்காதரனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் உடனடியாக சமூகநலத்துறை அலுவலர் தேவகுமாரிக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு மற்றும் சமூக நல அலுவலர் சார்பில் சமூக நல பணியாளர் தவமணி மற்றும் குழுவினர் காந்தல் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், உண்மைத் தன்மையை உறுதி செய்த பின்னர், உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில்,  காவல் ஆய்வாளர் கண்மணி தலைமையிலான காவல் துறையினர் இரவோடு இரவாக திருப்பூர் மற்றும் சேலத்திற்கு சென்று குழந்தைகளை மீட்டு உதகை கொண்டு வந்துள்ளனர்.  மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தியதில், குழந்தையை விற்ற பெற்றோர், வாங்கிய பெற்றோர் மற்றும் இடைத்தரகர் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவத்தால் காந்தல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

;