districts

img

ஓட்டு கேட்டு வராதீங்க விரட்டப்படும் நாம் தமிழர் கட்சியினர்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல்  வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரைக்காக ஈரோடு வந்தார். அப்போது  பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அருந்ததியர் மக்கள் வந்தேறிகள் என பொருள் படும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பொதுக்கூட்ட மேடையில் பேசினார்.

இந்த பேச்சு முற்போக்கு அமைப்புகள் மற்றும் அருந்ததியர் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜிநகர் அருந்ததி தெருவில் வாக்கு கேட்க சென்ற நாம் தமிழர் கட்சியினரை, அப்பகுதி ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..  உங்கள் கட்சியின் தலைவர் சீமான் அருந்ததியர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் மேடையில் பேசுகிறார். அதுமட்டுமின்றி அருந்ததியர்கள் குறித்த தவறான தகவல்களையும் கூறுகிறார். இது எங்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே நீங்கள் அருந்ததியர்களின் வாக்குகளை கேட்டு எங்கள் தெருவிற்குள் வரக்கூடாது. இதுகுறித்து உங்கள் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் உங்களை இந்த பகுதிக்குள் வருவதற்கு அனுமதி அளிப்போம். எனவே திரும்பிச் செல்லுங்கள் என ராஜாஜி நகர் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் கூறினர். செய்வதறியாது தவித்து நின்ற நாம் தமிழர் கட்சியினர் வேறு வழி இன்றி வாக்குகளை கேட்காமல் திரும்பச் சென்றனர்.

இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியின் பல்வேறு இடங்களிலும், இதே நிலை நீடிப்பதால் கணிசமான வாக்குகளை பெறுவோம் என நினைத்திருந்த நாம் தமிழர் கட்சியினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முற்போக்கு அமைப்பினர் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது மக்களை இன ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் சீமான் போன்ற  நபர்கள் அரசியல் களத்தில் இருந்தே முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டியவர்கள் என தெரிவித்தனர்.

;