அருப்புக்கோட்டை அருகே உயர்நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தி கண்மாய் கரையில் கனரக வாகனங்களை தனியார் கல்குவாரி நிர்வாகத்தினர் இயக்கி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அருப்புக்கோட்டை ஒன்றியம், புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்டது பன்னிகுண்டு கண்மாய். கண்மாய் கரையிலும் நீர்வரத்து ஓட்டையிலும் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர், அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகியோரும், கண்மாய் கரை மற்றும் நீர்வரத்து ஓடை வழியாக கனரக வாகனங்கள் செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளின் உத்தரவையும் மீறி முருகன் கல்குவாரி நிர்வாகத்தின் கனரக வாகனங்கள் நீர்வரத்து ஓடையிலும் பன்னிக்குண்டு கண்மாய் கரையிலும் இயக்கினர். இதனையடுத்து, புலியூரான் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கனரக வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த திருச்சுழி காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு, நீதிமன்ற உத்தரவை மீறிய கல்குவாரி நிறுவனத்தினரை எச்சரித்து வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.