கடினமாக உழைத்து குடும்ப கஷ்டங்களை போக்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலுக்கு வந்தவர்கள், “நம்மை மீட்க யாரும் வரமாட்டார்களா? உரிமை பெற்று தர மாட்டார்களா?” என்று புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் உதயமானது தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு). துவங்கிய காலம் தொட்டு இன்று வரை ஆட்டோ தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. எங்கு ஒரு ஆட்டோ தொழிலாளி பாதிக்கப்பட்டாலும், அவர் சிஐடியு சங்கத்தில் இல்லாவிட்டாலும் கூட குரல் கொடுக்கிற அமைப்பாக செயல்படுகிறது. அதனால் தான் சிறிய அமைப்பாக துவங்கிய சங்கம் இன்று 40 மாவட்டங்களில் 42,000 உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் அமைப்பாக வளர்ந்துள்ளது.
வருமானத்தை பறிக்கும் கொடுமை
ஆரம்பத்தில் கை ரிக்சா ஓட்டியவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டனர். இன்று படித்துவிட்டு வேறு பணி கிடைக்காததால் சுயதொழில் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் ஆட்டோ தொழிலுக்கு வந்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். ஆனால் ஆளும் வர்க்கம் இத்துறையை சீரழிக்க துடிக்கிறது. டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண விலை உயர்வு, ஆர்டிஓ அலுவலக கட்டண உயர்வு, ஆன்லைன் அபராதம் என்கிற பெயரில் ஆட்டோ தொழிலாளர்களின் வருமானத்தில் பெரும் பகுதியை அரசாங்கம் பறிக்கிறது. இது ஒரு புறம் இருக்க, ஓலா, உபேர், ரேபிட்டோ போன்ற பன்னாட்டு நிறு வனங்கள் எவ்வித மூலதனமும் போடாமல் ஆட்டோ தொழிலா ளர்களின் வருமானத்தில் ஒரு பகுதியை பறிக்கின்றன.
மேலும் சொந்தப் பயன்பாட்டிற்கு வாங்கிய இரு சக்கர வாகனங்களை சட்ட விரோத மாக பைக் டாக்ஸி என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர். தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி கொடுத்த அரசாங்கம், தற்போது மேக்சி கேப்களுக்கும் ஆள் ஏற்றக்கூடிய அனுமதி வழங்கி ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலையும் சீர ழிக்கத் துவங்கியுள்ளது. இத னால் கிராமப்புறத்தில் ஆட்டோ தொழில் செய்யும் தொழிலா ளர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும், ஆன்லைன் அபராதம் ரத்து செய்யப்பட வேண்டும், தொழிற் சங்கங்களோடு ஆலோசித்து மீட்டர் கட்டணத்தை அறிவிக்க வேண்டும், அரசே ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும், பென்ஷன் தொகையை 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஐந்து லிட்டர் எரிபொருள் மானியமாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி யுள்ளோம். இந்த போராட்டங்களின் அனு பவங்களை பரிசீலிக்கவும், மேலும் பலமான போராட்டத்தை திட்டமிடவும் பெரம்பலூரில் செப்டம்பர் 20 அன்று மாபெரும் பேரணி யுடன் இன்று 10வது மாநில மாநாட்டில் கூடியுள்ளோம். வரும் காலம் தேர்தல் காலம் என்பதால், நமது கோரிக்கைகளை ஒன்றுபட்டு எழுப்புகிற போது நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுவோம்