அரியலூர், ஜூலை 5 -
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அருகே கிரானைட் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை மூலம் 2020-21 ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணி கள் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கை கொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 இடங் களில் தொடங்கின.
இதில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முத லாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவ ருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர் களின் அரண்மனை இருந்ததாக கூறப் படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் முதற்கட்ட அக ழாய்வு பணிகள் தொடங்கின. இந்த பணியின்போது பழங்கால கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலை நயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்த தற்கான எச்சங்கள் கிடைத்தன. அவை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் முதலாம் ராஜேந்திர சோழ னால் கட்டப்பட்ட அரண்மனை சுற்றுச் சுவரின் ஒரு பாகமும், பின்னர் அரண் மனையின் தொடர்ச்சியாக 2-ஆவது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக் கும் மேலாக நடைபெற்ற இந்த பணி யில், நாளொன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதத் துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறை வடைந்தது. இதைத் தொடர்ந்து இப்பகு தியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள், கடந்த 2022 மார்ச் 11 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கப் பட்டன. பின்னர் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஏப்ரல் 6 அன்று துவங்கப்பட்டது.
3 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வா யன்று மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது கிழக்கு மேற்காக 315 செ.மீ. நீளமும், 45 செ.மீ. அகலமும் உள்ளது.
மேலும், நீண்ட கிரானைட் கல் தூண் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது 72 செ.மீ நீளமும், 76 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. இந்த கிரானைட் தூணானது சாய்ந்தவாறு கிடப்பதால் உடைந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. தொடர்ந்து, இந்த இடத்தில் அகழ்வாய்வு பணியை மேற் கொண்டால், அதனுடைய முழு விபர மும் தெரிய வரும். இந்த கல் தூணா னது மாளிகையின் தென்பகுதி கோட்டை வாசலாக இருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.